அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு: நிபுணர் குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும்
அரசு
ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய முரண்பாடு தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்கள் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை அரசு உடனடியாகச் செயல்படுத்தவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது குறித்து அரசுக்குப் பரிந்துரை அளிப்பதற்காக அமைக்கப்பட்ட சித்திக் குழுவின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிக்கையை ஸ்ரீதர் குழு தாக்கல் செய்த சில வாரங்களில், சித்திக் குழு அறிக்கையும் தாக்கலாகியிருப்பது அரசு ஊழியர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளில் மிக முக்கியமானது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது.
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதியிலிருந்து தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தனர். இப்பிரச்னையில் தலையிட்ட மதுரை உயர்நீதிமன்றம், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அரசின் நிலைப்பாட்டை திங்கள்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தது. எனவே, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த ஸ்ரீதர் குழு, சித்திக் குழு பரிந்துரைகள் மீது தமிழக அரசு சாதகமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்து அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்
No comments
Post a Comment