Header Ads

Header ADS

இணைய வழியில் மாணவர்கள் வருகைப் பதிவு: ஆசிரியர் பணியிடங்களை தக்கவைப்பதில் பள்ளிகள் தடுமாற்றம்!



இணைய வழியில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், குறைவான மாணவர்களுடன் அதிக ஆசிரியர் பணியிடங்களை கொண்டுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக (emis.tnschools.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு எமிஸ் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, பள்ளிக்கு வரும் மாணவர்களின் வருகைப் பதிவை டி.என்.எமிஸ் (tnemis-cell) என்ற செயலியில் பதிவேற்றம் செய்ய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த இணைய வழி வருகைப் பதிவேடு பராமரிப்பு, தனியார் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சில அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை குறிப்பிட்ட சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், வருகை பதிவேட்டில் அதிக மாணவர்களின் பெயர்களை பதிவு செய்து முறைகேடு நடப்பதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

அதன் மூலம், ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்வதோடு, அரசின் நலத்திட்ட உதவிகளையும் அதிகளவில் பெற்று வந்தனர். குறிப்பாக சத்துணவுக்காக வழங்கப்படும் பொருள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் வெளிச் சந்தைகளில் விற்பனைக்கு அனுப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை ஆய்வு செய்வதற்காக செல்லும் வட்டார கல்வி அலுவலர்களையும், ஆசிரியர் பயிற்றுநர்களையும், அந்தந்தப் பள்ளிகளின் நிர்வாகம் சரி கட்டியது. இதனால் பிற வட்டாரங்களைச் சேர்ந்த கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலமாக ஆய்வு நடத்தியபோதும், இந்த தவறுகளை சரி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 1900-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அனைத்துப் பள்ளிகளிலும் எமிஸ் செயலி மூலம் மாணவர்களின் வருகைப் பதிவேடு பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை 257 அரசுப் பள்ளிகளிலும், 101 தனியார் பள்ளிகளிலும் மட்டுமே இணைய வழியில் வருகைப் பதிவேடு நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியது:
இணைய வழி வருகைப் பதிவேடு மூலம் காகிதப் பயன்பாடு தவிர்க்கப்படுவதோடு, மாணவர்களின் வருகையை நேரடியாக மாவட்ட மற்றும் மாநில கல்வித் துறை அலுவலகத்திலும் அறிந்து கொள்ள முடியும்.

அதேபோல், குறைவான மாணவர்கள் எண்ணிக்கை இருந்தாலும், வருகைப் பதிவேட்டில் அதிகமாக பதிவு செய்து ஆசிரியர்கள் எண்ணிக்கையை தக்க வைத்துக் கொள்ளும்நிலை இனி தடுக்கப்படும். மேலும், அரசு சார்பில் வழங்கப்படும் சத்துணவு, முட்டை, சீருடை உள்ளிட்ட திட்டங்கள், இணைய வழி வருகை பதிவின்படி மட்டுமே வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் 2019 ஜனவரி முதல் இணைய வழி வருகைப் பதிவு கட்டாயமாக்கப்படவுள்ளது என்றார்.
-.நங்கையார்மணி

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.