TNPSC புதிய இணையதளம் தயார்: இனி விடைத்தாள்களைப் பெறலாம்.. புதிய அம்சங்கள் என்னென்ன?
தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்வர்கள் விடைத்தாள்களை இணையதளம் வாயிலாக பெறலாம், முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் பெறலாம் என்றும் இந்த மாதத்தில் புதிய இணையதளத்தை துவக்க இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்களுடன் புதிய இணையதளத்தை அரசு பணியாளர் தேர்வாணையம் விரைவில் துவக்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு www.tnpsc.gov.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இதனுடன் இணைந்து புதிய இணையதளம் ஒன்றை அரசு பணியாளர் தேர்வாணையம் உருவாக்கி வருகின்றது.
தேர்வர்கள் மத்தியில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு அதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய இணையதள பக்கத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் முந்தைய ஆண்டுகளில் நடத்திய தேர்வுகளின் வினாத்தாள்கள் இடம்பெற உள்ளது.
இதில் முக்கியமாக நடத்தி முடிக்கப்படும் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு அந்தந்த தேர்வில் பங்கேற்ற தேர்வர்களின் விடைத்தாள்கள் இணையதள பக்கத்தில் இருக்கும். தங்களின் விடைத்தாள்களை பார்க்க விரும்பும் தேர்வர்கள் அதனை பெற நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
No comments
Post a Comment