கலாம் பிறந்தநாள் வாழ்த்து கவிதை
இது
கலாமின் காலம்
ராமேஸ்வரத்து அறிவுக்கடலே அறிவியல்தேசத்து தங்கமெடலே
நீ அரசுப்பள்ளி மாணவனாமே?
சேர்ந்து அனைவரும் அடிக்கிறோம்
ஒரு
ராயல் சல்யூட்
உன்னை உதாரணங்காட்டாது ஏதிங்கே உயர்வு?
நீ இளசுகளின் கனவுகளை மடை மாற்றிய திருமகன்
பகல்கனவுகளுக்குள் லட்சியக்கனவுகள் பொருத்திய பெருமகன்
எளிமை உண்மை இவைகளே உயர்த்தியது உன்னை
அதுவே உலகேற்கும் உண்மை
இயற்கையை நேசித்த இயற்பியலாளனே
உன்
வீட்டில் பறவைகள் மட்டுமா குடியிருந்தது
பந்தாவற்ற பணிவும் தானே குடியிருந்தது
உன்
விஞ்ஞான மூளைக்குள் மெய்ஞானமும் பரவிக்கிடந்தது
கவிஞானமும் கலந்தே இருந்தது
உனதறிவு பகைமை அழிக்கவும் துணை நின்றது
வறுமை ஒழிக்கவும் வழிசொன்னது
நீ நடிக்காமலேயே தலைவனானவன்
மாமா
தாத்தாவெல்லாம் கிடைத்தபோது மாணவச்செல்வங்களுக்கு
மனதுக்கினிய நண்பனானவன் நீ
நீ ஏவிய கணைகளில் விஷமில்லை
விஷயமிருந்தது
எப்பதவியிலும் இல்லா நிறைவு ஆசானாய் இருப்பதில் இருக்கிறதென இயம்பி மனம்விரும்பி சொல்லிக்கொடுத்தாய்
நீ எங்கள் அறிவு மிளிர
பூமியில் அவதரித்த புதுமைத்தாய்
அதனால் தான் இறுதிவரை இருந்தாய் செம கெத்தாய்
உலகமே ஏற்றதுனை நழுவ விடாத பெருஞ்சொத்தாய்
எங்கள் வழிகாட்டியாய்
வாழ்க்கைக்காட்டியாய்
வலுவூட்டியாய் எப்போதுமிருக்கிற
எங்கள் கனவு நாயகனே
உனக்கு பிறவித்திருநாள் வாழ்த்துகள்
எங்கள் கனவுகளோடு உன் கனவையும் நெஞ்சிலேந்தி நடைபயில்கிறோம்
விரைவில் எங்கள் நாடாகும் வல்லரசு
பாரெங்கும் கொட்டும் வெற்றி முரசு
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
No comments
Post a Comment