சர்ச்சைக்குரிய பதிப்புகள்: தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, June 27, 2019

சர்ச்சைக்குரிய பதிப்புகள்: தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



10,11-ம் வகுப்பு பாடங்களில் இருந்து அய்யா வைகுண்டர் குறித்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி பாடநூல்களில் அய்யா  வைகுண்டர் குறித்து, தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை திருத்தம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக அய்யா வழியினர் அறிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மனு அளித்த அய்யா வழியினர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு வரலாறு பாடநூலில் அய்யா வைகுண்ட சுவாமியை  மனிதனாக, போராளியாக, புரட்சியாளராக குறிப்பிட்டுள்ளதாக கூறினர். பாடநூலில் வைகுண்டர் என குறிப்பிட்டு போலி படத்தை பதிவிட்டுள்ளதாகவும் அய்யா வழியினர் குறை கூறினர். மேலும், அய்யா வைகுண்டர் பற்றிய தவறான பதிவை  திருத்தாவிட்டால், சென்னையில் வரும் 30-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அய்யா வழி அன்பவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக அரசின் புதிய பாட புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், 10,11-ம்  வகுப்பு பாடங்களில் இருந்து அய்யா வைகுண்டர் குறித்த சர்ச்சைக்குரிய வரிகள் மற்றும் படங்களை நீக்க உத்தரவிட்டுள்ளது. மேலும், 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்ற வரியை நீக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்தியாவின் அலுவல் மொழி இந்தி, இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என சேர்க்க ஆணையிடப்பட்டுள்ளது. 7-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்தில், முத்துராமலிங்கத்தேவர் குறித்து  இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரியை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு பின் இஸ்லாமிய தலைவர்கள், முஸ்லீம் ஆட்சியை நிறுவமுயன்றனர் போன்ற பகுதிகளையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments: