சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
2019, ஏப்ரல் 9ம் தேதி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக்கூடாது என தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.இந்த சுற்றறிக்கையை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், 2018-2019ல் தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் போர்டு
பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு நீட், ஐஐடி என பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு
கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும். இப்போட்டி தேர்வுகள் மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இந்திய அளவில் நடைபெறும். அதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தனிவகுப்புகள் நடத்தப்பட வேண்டும். எனவே, தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு மெட்ரிக்குலேசன் பள்ளி கல்வித்துறை இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
No comments
Post a Comment