மலை கிராம பள்ளிகளில் ரோபோ மூலம் கல்வி பயிற்சி: அடுத்த கல்வி ஆண்டே நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மும்முரம்
மலை
கிராமங்களில் செயல்படும் பள்ளிகளுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன் ரோபோ மூலம் கல்வி கற்பிக்கும் புதிய நடைமுறையை வரும் கல்வி ஆண்டிலேயே செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.தமிழக பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக சமச்சீர் கல்வித்திட்டம், ஆங்கிலவழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி முறை கற்பித்த என தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பின்தங்கிய கிராமப்புற அரசுப்பள்ளிகள் மற்றும் மலைகிராமங்களில் இயங்கும் அரசுப்பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து வசதியுடன், ரோபோ மூலம் கல்வி கற்பிக்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் கேட்டபோது, 'இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தரமான இலவச கல்வியை வழங்க வேண்டியது அரசின் கடமையாக்கப்பட்டுள்ளது.பழங்குடியின மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்கள், பின்தங்கிய அடித்தட்டு மக்கள் வாழும் பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் முறையான போக்குவரத்து வசதியின்றி தங்கள் கல்வியை அரைகுறையாக முடிப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்ட 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் வரும் கல்வி ஆண்டு முதல் சிரமமின்றி பள்ளிகளுக்கு சென்று திரும்ப இலவச போக்குவரத்து வசதி அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்கு சென்று வர ேவன், ஆட்டோ வசதியை செய்துதர வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் கிராமப்புற, மலைவாழ் கிராமங்களை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோ உதவியுடன் செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே ரோபோ மூலம் செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் திட்டம் சென்னை உட்பட ஒரு சில நகரங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் வெற்றியை தொடர்ந்து பின்தங்கிய மற்றும் மலைவாழ் கிராமப்புற மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு அடுத்த கல்வி ஆண்டு முதலே செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மாணவர்களின் பெயர், முகவரி, உருவப்படம், வகுப்பு என முழு விவரங்களும் ரோபோக்களில் முன்கூட்டி பதிவு செய்யப்படும். இதையடுத்து வகுப்பறையில் மாணவர்களின் முகங்களை வைத்து யாரெல்லாம் வகுப்புக்கு வந்துள்ளனர் என்பதை ரோபோவே பதிவு செய்து கொள்கிறது. அதன்பின்னர் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மாணவர்கள் விளக்கம் கேட்டால் அவர்கள் பெயரை கூறி ரோபோ உரிய பதில் அளிக்கும். மேலும் கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரிய படங்களுடன் ரோபோ விளக்கமளிக்கும். உதாரணமாக அறிவியல் பாடத்தில் விண்வெளி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டால் அதுசார்ந்த குறும்படங்களை காண்பித்து ரோபோ விளக்கும் வகையில் தமிழில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அமெரிக்கா, ஜப்பான், ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனம் மூலம் ரோபோக்கள் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக மலைகிராமங்களில் செயல்படும் ஓராசிரியர் பள்ளிகளில் முதல்கட்டமாக ரோபோ கல்வி முறை அமலுக்கு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, புதூர்நாடு, பலாமரத்தூர், கானமலை, தொங்குமலை என பல மலை கிராமங்களில் உள்ள ஓராசிரியர் பள்ளிகளுக்கு இந்த வசதி கிடைக்கும்' என்றனர்
No comments
Post a Comment