'5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா?’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்!
"இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா?"
APP-ல் படிக்க
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்குத் தமிழக கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இப்புதிய திட்டத்தை எதிர்த்து பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் எதிர்வினையை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் எதிர்க்கும் முக்கியமான அம்சம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்பதை. சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதுவும் இந்த ஆண்டு முதலே நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு ஆதரவு என்பது ஒரு புறம் இருந்தாலும், எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி மக்கள் அதிகம் வாழுமிடம். அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் மகாலட்சுமி அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அவரின் கருத்தை ஒரு கடிதமாக அளித்திருந்தார்.
5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பவர்களுக்கு, வணக்கம்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு முதலில் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை இவ்வரசு எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), நடைமுறை ஏப்ரல் 1, 2010-ன் படி நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.
* 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
* இவ்வாறு சேர்க்கப்படும்
குழந்தைகளிடம் வயதுச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது.
* தேர்வு எதையும் வைக்கக் கூடாது.
* சேர்க்கை மறுப்பு எவ்வகையிலும் கூடாது.
சட்டம் இப்படி வரையறுத்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் தமிழக அரசு கட்டாய பொதுத்தேர்வை வைக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. கல்வி அளிப்பதும் கல்வி பெறுவதும் கட்டாயம். ஆனால், சாமானியக் குழந்தைகளிடமிருந்து கல்வியைப் பறிக்கும் நிலைதான் இன்று உருவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 99.9 சதவிகிதம் பழங்குடியின மக்கள் மட்டும்தான். இவர்களுக்கென்று சொந்தமாகப் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. வன உரிமைச் சட்டத்தின்படி காட்டைச் சீரமைத்து, பயிர் செய்து மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வனத்துறையிடமே ஒப்படைத்துவிடுவர். விவசாய அறுவடை முடிந்ததும் கேரளாவுக்கு மிளகு எடுக்கச் செல்வார். வேறு வேலை இல்லாத பட்சத்தில் வேறு வழியுமில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் செல்பவர்கள் ஏப்ரல் மாதம்தான் வருவர். குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர்களும் இதில் விதிவிலக்கு இல்லை. கைக்குழந்தை வைத்திருந்தால் அந்தக் குழந்தையை வைத்துக்கொள்ள வளர்ந்த, பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். ஒருவேளை குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு சென்றாலும் பார்த்துக்கொள்ள ஆளில்லை.
அந்த
ஐந்து மாதங்களில் சம்பாதித்து வருவதை வைத்துதான் ஓராண்டு முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாவது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். இப்படி வாழ்வாதாரத்துக்காக ஓடி உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் ஜவ்வாதுமலையில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா? கேரளா சென்று வந்த உடனே பொதுத்தேர்வா என அஞ்சி ஒரேடியாகப் பள்ளியைவிட்டு ஓடவைக்கும் சூழலைத்தான் கல்வித்துறை உருவாக்கப்போகிறதா?
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இன்றளவும் எங்கள் பள்ளியில் நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது. இனிமேலும் நடக்கும். படிக்க விரும்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டமே துணையாய் இருந்துவருகிறது. என்னைப் போன்ற எத்தனையோ ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு குழந்தைகளுக்குக் கல்வியை வழங்கி வருகின்றனர். உதாரணத்துக்கு சிவரஞ்சனியைப் பற்றிச் சொல்கிறேன்.
2016-17-ம் கல்வி ஆண்டில், எங்கள் ஊரின் டெய்லர் ராமகிருஷ்ணன் அண்ணன், 12 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும் அவரின் அம்மாவையும் அழைத்துவந்து, `டீச்சர், இவங்க எனக்குத் தூரத்து சொந்தம். இந்தக் குட்டிபொண்ணோட அப்பா, மாடு முட்டி இறந்துட்டாரு. கடன் தொல்லை அதிகமாயிருந்ததால், இவங்க குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரிதான். இப்போ ஓரளவு கடனை அடச்சிட்டாங்க. இந்தப் பொண்ணு, படிக்க ஆசைப்படறதா இவங்க சொன்னாங்க. நீங்க இருக்கும் தைரியத்துல அழைச்சிட்டு வந்துட்டேன். எப்படியாவது பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கோங்க’’ என்றார். நான் அந்தச் சிறுமியிடம் பேசினேன்.
`ஏன்டாம்மா, நீங்க கேரளாவுல பள்ளிக்கூடத்துக்கு எதாவது போனிங்களா?’’
``இல்லிங்க மிஸ்.’’
``இப்போ 5-ம் வகுப்புல சேர்த்தா உங்களால படிக்க முடியுமா?’’
``கண்டிப்பா முடியும் மிஸ். எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு மிஸ். எப்படியாவது என்னைச் சேர்த்துக்கோங்க’’ என்றாள் நம்பிக்கையோடு. நான் ராமகிருஷ்ணன் அண்ணனிடம்,
``இவங்க அம்மா இங்கேயே இருப்பாங்களா இல்ல, மறுபடியும் கேரளாவுக்குப் போய்டுவாங்களா?’’
``போய்டுவாங்க மிஸ்.’’
``அப்போ. ஸ்கூல் லீவ் விட்டா யார் வீட்டுக்கு இந்தக் குழந்தை போகும்?’’
``அவங்க சித்தி இருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போய்டும் டீச்சர்.’’
``சரிங்க அண்ணா. பள்ளியில சேர்த்துடலாம். அதுக்காகத் தனியா சட்டமே இருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க’’ என்று தைரியம் கூறினேன்.
அந்தக் குழந்தையின் அம்மா, ``ரெண்டு ஆம்பள பசங்களும் இருக்கானுங்க. ஒருத்தனுக்கு 5 வயசு, இன்னொருத்தனுக்கு 6 வயசு. இன்னும் ஒருமாசம் கழிச்சிக் கூட்டிட்டு வந்தா பள்ளிக்கூடத்துல சேர்த்துப்பீங்களா?’’ என்று கேட்டார். `தாராளமாக அழைச்சிட்டு வாங்க’ என்று கூறி அனுப்பினேன்.
இப்படி வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்த குழந்தைதான் சிவரஞ்சனி. பள்ளியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் தமிழை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் சிறுசிறு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தார். கொத்தடிமையாய் சிறுவயதிலிருந்தே கடனை அடைக்கும் தொழிலாளியாக இருந்ததால், அவளுக்கு வாழ்க்கைக் கணக்கின் மூலமே அடிப்படை கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்க, சீக்கிரமே பழகிக்கொண்டார். முதலிரண்டு வகுப்புப் பயிலும் சில குழந்தைகளைக் குளிக்க வைத்தல், துணி துவைத்துக்கொடுப்பது, சாப்பாடு ஊட்டிவிடுவது, தலைசீவி விடுவது என நிறைய உதவிகளை இன்றளவும் செய்துவருகிறார். நடனம், பாட்டு, கதை எழுதுதல், ஓவியம் எனத் தன்னால் இயன்ற அனைத்திலும் சிறப்பாகப் பங்கெடுக்கிறார்.
உள்வாங்கும் திறனும், அதை வெளிப்படுத்தும் அபாரம் அவளுக்கு. எப்படியாவது கல்வி கற்று, சாதித்துவிட வேண்டுமென்ற முழுமூச்சில் களத்தில் இருக்கிறார். இப்போது 7-ம் வகுப்பில் படித்து வருகிறாள். அன்று கொத்தடிமைத் தொழிலாளி... இன்று குழு ஆசிரியர்.
நிறைய குழந்தைகளை இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 2, 3 & 4-ம் வகுப்புகளில் நேரடியாகச் சேர்த்திருக்கிறேன். ஆனால், சிவரஞ்சினிதான் 5-ம் வகுப்புக்கு முதல் அனுபவமாக அமைந்தார் எனக்கு.
எத்தனை குழந்தைகள் சிவரஞ்சினிபோல வேகமாகக் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா? ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள்? மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா? அதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?
ஒரு
வகுப்பில் பயிலும் 10 விழுக்காடு குழந்தைகள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளாக இருப்பார்கள் என. பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. படிக்க இயலாத எத்தனைக் குழந்தைகளுக்கு
dyslexia, dysgraphia, dyscalculia மற்றும்
A.D.D (Attention Deficit Disorder) இருக்கிறது என்று நுணுக்கமாகக் கண்டறியப்பட பணிகள் எவ்வளவோ இருக்கிறது! அவற்றையெல்லாம் களைவதை விடுத்து, அடித்தட்டுக் குழந்தைகள் இந்தத் தேர்வுகளை நடத்துவது அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் கல்வியைக் கருவிலேயே அழிப்பதற்குச் சமமாகும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் உட்கிரகிக்கும் திறன் வேறுபடும். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. உளவியல் சார்ந்த பல்வேறு காரணங்களை ஒவ்வொரு குழந்தையின் கற்றலுக்கும் பொருத்தலாம். மெதுவாகக் கற்கும் குழந்தைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம் தங்களின் அதிகார முடிவுகளால் என்பதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்துத் தேர்வு மட்டுமே அறிவு என நம்பிக்கொண்டிருக்கும் இந்தக் கல்வி முறையில், அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது தற்போது புதைக்கப்படும் அபாயத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் என்னும் தலைப்பில் உரையாடுவது போன்று உள்ளது தமிழகக் கல்வித்துறையின் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது. கடைக்கோடி கிராமங்களின், வனவிலங்குகள் நடமாடும் உள்மலை கிராமங்களின் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த முடிவை நிறுத்தி வையுங்கள்.
No comments
Post a Comment