பள்ளிக் கல்வித்துறை திட்டங்களும் குளறுபடிகளும்..! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, December 2, 2018

பள்ளிக் கல்வித்துறை திட்டங்களும் குளறுபடிகளும்..!




கடந்த சில ஆண்டுகளாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிவிப்புகளும் திட்டங்களும் வெளியிடப்படுவது வாடிக்கை ஆகிவிட்டது. ஆனால், அறிவிப்புகளும் திட்டங்களும் நடைமுறைக்கு சம்பந்தமே இல்லாதவாறு கல்விச் செயல்பாடுகள் உள்ளன.

உதாரணமாக சொல்வதென்றால் +1க்கு பொதுத் தேர்வு அறிவித்தார்கள்... பிறகு அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்றார்கள். 2019 மார்ச் மாதம் நடக்கவிருக்கும் +2 பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கே தேர்வு நடத்தப்படும் என்று அறிவித் தார்கள். இதனால், மாணவர்களும் என்ன படிப்பது, எப்படிப் படிப்பது, என்ன குறிக்கோளோடு படிப்பது என்பது புரியாமல் திக்குத்தெரியாத காட்டில் விட்டதுபோல் குழப்பத்தில் உள்ளனர்.

மாணவர்கள் நிலையைப் போலவே ஆசிரியர்களும் எப்படிச் சொல்லிக்கொடுப்பது, அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாமல் எதை வைத்துக்கொண்டு கற்பிப்பது என்பது போன்ற பல்வேறு குழப்பங்களில் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

அதிரடியான மாற்றங்களால் துறை நிர்வாகத்திலும் குளறுபடிகள் என கல்வித் துறையே சீர்குலைந்து உள்ளது. இதுகுறித்து ஆசிரியர் கூட்டமைப்பு இயக்கத்தினர், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சொல்லும் கருத்துகளைப் பார்ப்போம்...

கு.தியாகராஜன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம். பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளி ஆகிய
வற்றை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக செயல்பட அரசாணை 100, 101 வெளியிடப்பட்டு புதிய கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. 

இவ்வரசாணையின் அடிப்படையில் பல்வேறு அதிகாரங்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இம்மாற்றங்கள் குறித்து ஆசிரியர் சங்கங்களிடமோ கல்வியாளர்களிடமோ எவ்வித கருத்துகளும்  கேட்காமல் தன்னிச்சையாக அவசரகதியில் அமுல்படுத்தப்பட்டன.
ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் இருந்துவந்தது. மாவட்ட கல்வி அலுவலர் அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை மேல்நிலைப்  பள்ளிகளிலும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளிலும், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் ஆய்வுப் பணியினை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடமும் அவ்வலுவலகத்தில் பணியாற்றிவந்த துணை ஆய்வாளர் பணியிடமும் ஒழிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது.
இயக்குநர், இணைஇயக்குநரின்அதிகாரங்கள் பறிக்கப்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 
முதன்மை கல்வி அலுவலர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி இயக்குநரின் கீழ் பணியாற்றி வருவதால் பள்ளிக் கல்வி இயக்குநர் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே செயல்படுத்த முயல்கின்றனர். தொடக்க கல்வி இயக்குநரோ, மெட்ரிக் பள்ளி இயக்குநரோ பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிப்பதிலோ செயல்படுத்துவதிலோ மிகுந்த சுணக்கம் காணப்படுகிறது. இதனால்  நிர்வாக மாற்றங்களினால் எவ்விதப் பலனும் இல்லை. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்திட அரசுப் பள்ளிகளின் நிர்வாகத்தை பழைய முறைப்படி செயல்படுத்த வேண்டும்.கி.பாலசண்முகம், ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு ஆசிரியர் சங்கம்.

இந்த கல்வியாண்டில் தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தையும் முதல்கட்டமாக  1,6,9 மற்றும் 11 வகுப்புகளுக்கு புதிய பாடநூல்களையும் அறிமுகம் செய்தது. 1 முதல்  9ம் வகுப்பு வரை முப்பருவத்தேர்வுத் திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது.முதல் பருவ நூல்கள் ஆரவாரத்துடன் அறிமுகம் செய்யப்பட்டன.

புதிய பாடத்திட்டக்குழு, மாநிலக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், கல்வித் துறை இணைந்தும் தனித்தனியாகவும் ஆசிரியர்களுக்கு ஜூன் மாதத்தில் பயிற்சி அளித்தன. இரண்டாம் பருவம் தொடங்கி  35 நாட்களுக்கு மேல் ஆகியும் 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட இரண்டாம் பருவப் புதிய பாடநூல்களைப் பயிற்றுவிப்பது தொடர்பாக எவ்விதப் பயிற்சியும்  அளிக்கவில்லை. பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும்  ஆசிரியர்களிடம் இதுகுறித்து கலந்துரையாடியபோது கலவையான கருத்துகளை கூறினார்கள்.
 
ஒன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள், “தமிழ்ப் பாடநூலில் எழுத்தோவியம், சொல்லோவியம் போன்ற பகுதிகள் புதிதாகவும், மாணவர்களைக் கவர்வதாகவும் உள்ளது. எப்படி திறம்பட கற்பிக்க வேண்டும் என பயிற்சி அளித்தால் மேலும் சிறப்பாக மாணவர்களை சென்றடையும்’’ என்றனர். மேலும்  51 வேலை நாட்களே உள்ள இரண்டாம் பருவத்தில் 55 பக்கங்களைக் கொண்ட  தமிழ்ப் பாடநூலை ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்பித்தல் கடினமானது என்றனர்.

ஒன்பதாம்  வகுப்பு  பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் முற்றிலும் முரண்பட்ட கருத்தை தெரிவித்தனர். “இதற்குப் பயிற்சியே தேவையில்லை. ஏனென்றால், புதிய கணக்குப் பாடநூலில் பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. பாடப்பொருளை மாற்றாமல் வெறும் அட்டை மட்டுமே மாற்றியிருப்பதற்கு எதற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டும்?” என்றனர்.
ஆறாம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களோ,”பயிற்சி வழங்காவிட்டாலும் பரவாயில்லை, 2,3,4 வகுப்பாசிரியர்களுக்கு வழங்குவதைப்போலகற்றல் கற்பித்தல் ஆசிரியர் கையேட்டினைவழங்கினாலே போதும்என்றனர்.

கல்வித்துறை செயலர் மாற்றத்திற்கு பிறகே புதிய பாடநூல்கள் நடைமுறைபடுத்துவதில் முக்கியத்துவம் குறைந்துவிட்டது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  இரண்டாம் பருவம் புத்தகப்பணியே இவ்வளவு சுணக்கம் ஏற்பட்டால் வரும் ஆண்டுகளில்  மற்ற வகுப்புப் புதிய பாடநூல்கள் தரமாக இருக்குமா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. உமா, அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு.

அரசின் கல்விக் கொள்கைகளுக்கும் எதார்த்தத்திற்கும் இடைவெளி மிக அதிகமாக உள்ளது. முதலாவது, இந்தியக் கல்வி உரிமைச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பள்ளியும் சமுதாயமும் தொடர்புகொண்டு பள்ளியின் முழு வளர்ச்சிக்கு உதவும்.
ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் இதற்கான ஏற்பாடுகளே இருப்பதில்லை. பெற்றோரிடம் ஆசிரியர் செல்வதில்லை, பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெரிய இடைவெளி இருப்பது பள்ளி மேலாண்மைக் குழுக்களின் செயல்படா தன்மையைக் காட்டுகிறது.

ஆகவேதான்அரசுப் பள்ளிகள் பற்றிய அக்கறை அந்த ஊர் மக்களிடம் இருப்பதில்லை. இதன் நீட்சியாக அரசுப் பள்ளிகளை மக்கள் புறக்கணிப்பதால் மாணவர் எண்ணிக்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இதில் அரசு எஸ்.எம்.சி. (SMC) என அழைக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுக்களைப் பள்ளிகளில் முழு வீச்சில் செயல்படுத்துவதைக் கண்காணித்து நெறிப்படுத்த  வேண்டும்.

இரண்டாவதாக... பள்ளிக் குழந்தைகள் 1 முதல் 9ம் வகுப்புகளின் அடைவுத் தேர்வு மதிப்பீடுகள். இது தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு என்ற மதிப்பீட்டு முறை, சி.சி. (CCE) என அழைக்ககப்படுகிறது. இதன் பயன்பாடும் விளைவும் வெறும் ஏடுகளாகி, பதிவேடுகளாக மட்டும்  ஜொலிக்கின்றன. இதில்கூட மாணவர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கான அறிவியல் ரீதியான ஆய்வு (scientific research method) வழிகாட்டுதல்கள் இல்லாததால் மிக நல்ல சி.சி. (CCE) முறையும் நேரத்தை வீணாக்கி வருகிறது.

வெறும் பதிவேடுகள் பின்னால் செல்ல ஆசிரியர்களும் கல்வி அலுவலர்களும் ஆர்வம் காட்டுவதால் வகுப்பறைக் கற்றல் - கற்பித்தலின் உண்மைத் தன்மை நீர்த்துப்போகிறது..இளங்கோவன், மாநிலத் தலைவர், 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றோர் நலச்சங்கம்.

அரசு தான் அறிவித்த எந்தவொரு அறிவிப்பையும் முழுமையாகவும், முறையாகவும் செயல்படுத்த முடியாமல் 11-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மதிப்பெண்களை கல்லூரிக் கல்விக்கு எடுத்துக்கொள்வது உள்ளிட்ட சில அறிவிப்புகளை திரும்பப்பெற்றுள்ளது. 2013ஆம்  ஆண்டு முதல் ஆசிரியர் நியமனங்களில் மிகப் பெரிய ஊழலை அரங்கேற்றி வருகிறது.

டெட் தேர்வு, முதுகலை ஆசிரியர் நியமனம், சிறப்பாசிரியர் நியமனம் போன்றவற்றில் கணிசமான தொகையை கல்லா கட்டிவிட்டு திறமையற்றவர்களை கற்பித்தல் பணியில் ஈடுபடுத்துகிறது. இதனால் திறன்வாய்ந்த ஆசிரியர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுவதோடு மாணவ சமுதாயமும் தொடர்ந்து கற்றல் அடைவில் சரிவை சந்திக்கிறது.
 
டேட்டா டெக் மெத்டெக் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக டிஆர்பி-யே ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அந்நிறுவனத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற 2013 டெட் தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளின் .எம்.ஆர் (OMR) விடைத்தாள்களை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். அதைவிடுத்துவிட்டு மீண்டும் தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு நடத்துவது என்பது அர்த்தமற்ற செயலாகும்.

சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்புஅன்றாடம் கல்வி அமைச்சரின் அறிவிப்புகள் வந்துகொண்டே உள்ளன. ஆனால், 2016 தேர்தலின்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் அதிமுக அரசு பதவியேற்ற நாளில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவாலும் அறிவிக்கப்பட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டித் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் கல்விப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். காலைச் சிற்றுண்டித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியம்.
 
அண்ணா பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் மற்றும் அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் தேர்ச்சிக் குறைபாடுகளைக்  களையும் நோக்கில் 11ம் வகுப்புப் பொதுத் தேர்வு முதன்முதலாக கடந்த கல்வியாண்டு நடத்தப்பட்டது. தற்போது 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மட்டுமே கல்லூரிப் படிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். உயர்கல்வியில் தமிழக மாணவர்களின் பின்னடைவுக்கே இது வழிசெய்யும்.  

- தோ.திருத்துவராஜ்

No comments: