தமிழகத்தில் மழை பாதிப்புகள் குறித்து உதவி கோர TNSMART மொபைல் செயலி!
*தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் நிலையில், பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யவும், அதன் அடிப்படையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் டி.என்.ஸ்மார்ட் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
*வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழை பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தயார் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் காவல்துறை அதிகாரி, மின்வாரிய அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மீன்வளத்துறை அதிகாரி, தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரி ஆகியோர் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள்.
*மழை பாதிப்பு, அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ள பகுதி, மின் இணைப்பு துண்டிப்பு என பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 1070 என்ற இலவச புகார் எண்ணில் பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் உடனடியாக அந்த அந்த துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும்.
*பின்னர் புகார் பெறப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.
*கடந்த 26-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி TNSMART என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.
*இந்தச் செயலியை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்தால், அதன் மூலம் மாவட்டவாரியாகவும், தாலுகா வாரியாகவும் அன்றைய தினம் பெய்யும் மழை அளவு, அடுத்த 3 நாட்கள் வரையிலான மழை அளவுகளை அறிந்துகொள்ளலாம், மேலும், தங்கள் பகுதியில் மழையினால் அதிகம் பாதிக்கக் கூடிய பகுதிகள் எவை என்பதையும் TNSMART செயலியின் மூலம் மக்கள் அறிந்துகொள்ளாம்.
*மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை புகைப்படம் எடுத்து TNSMART செயலியில் பதிவிட்டு புகார் அளிக்கலாம். அந்தப் புகார் அடிப்படையில் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இது வழிவகுக்கும்.
*மழை முன்னெச்சரிக்கை நடடிவடிக்கைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இலவச தொலைபேசி எண்ணுடன் இந்த செயலியையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments
Post a Comment