புயலால் சேதமடைந்த பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்படும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
புயலால் சேதமடைந்த பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
இதுகுறித்து, ஈரோட்டில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் கஜா புயல் தாக்குதல் காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்தப் புயலால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 136 நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் மேற்கூரை ஓடுகள் சேதம் அடைந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சேதமடைந்த இப்பள்ளிகள் விரைவில் சீரமைக்கப்பட்டு , மீண்டும் சிறப்பான முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
கஜா
புயல் தாக்கம் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் புயல், மழை, வெள்ளத்தால் சேதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் அளித்த புள்ளி விவரத்தின்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருவார காலத்துக்கு முன்பாக அனைத்து மாவட்டங்களிலும் புயல் சேதத்தைத் தடுக்க முன்னேற்பாடுகள், ஆயத்தப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்ததால் உயிர்ச் சேதம் குறைந்தது.
சிறப்பு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நல்ல முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சிறப்பாசிரியர் தேர்வில் கலந்துகொண்டவர்கள் எந்த இடத்தில் முறைகேடுகள் நடந்தது என்பதை நேரடியாக என்னிடம் சுட்டிக்காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வைரஸ் காய்ச்சல் , கால்நடைகளுக்கு நோய் தாக்குதல் தொடர்பாக மக்கள் குறைகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்தக் குறைபாடுகளைப் போக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் பல்வேறு இடங்களில் கூடுதலாக 50 மருத்துவர்கள், கால்நடைப் பராமரிப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர், அவர்களுக்கு உதவியாக கால்நடை மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் 300 பேர் கொண்ட குழுவினர் சார்பில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதற்குத் தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
No comments
Post a Comment