ஆன்லைனில் எஃப்ஐஆர்: புதிய திட்டம் அமல்!
வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் குற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பதிவு செய்யவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் மத்திய அரசு விரைவில் புதிய திட்டமொன்றை எல்லா மாநிலங்களிலும் அமல்படுத்தவுள்ளது.
இதற்கென்று பிரத்யேகமான குடிமக்களை மையமாகக் கொண்ட இணையதளங்களை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதுகுறித்து மத்திய உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த இணையதள வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவித்தார். “இந்த இணையதளம் மூலம் வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்துவது, குடியிருப்பு வீட்டை வாடகைக்கு விடுதல், வாகன ஓட்டுநர்களை வேலைக்கு நியமித்தல் உள்ளிட்ட பல வேலைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஏழு குற்றங்கள் குறித்து இந்த இணையதளம் வாயிலாகவே புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய முடியும். இதில் சான்றிதழ்கள் தொலைந்து போவது, வாகனத் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் குறித்துப் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கை குறித்து அந்தந்த மாநிலத்திலுள்ள போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்படும். காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மனுதாரரும் தெரிந்து கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட தனிநபர்கள் மற்றும் தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், தனியுரிமையைப் பாதுகாக்கவும், இந்த இணையதளத்தில் இருக்கும் குற்றம் சார்ந்த தகவல்கள், அறிக்கைகளை அங்கீகரிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும்.
No comments
Post a Comment