Header Ads

Header ADS

11-ம் வகுப்பில் அனைத்து பாடங்களும் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா? அதிகாரிகள் கண்காணிக்க பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை



பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

10, 11 மற்றும் 12-ம் வகுப்பு என தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளும் அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கும் விதமாக, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 600 மதிப்பெண்கள் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 600 மதிப்பெண்கள் என பதிவு செய்து தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என ஆணை வழங்கப்பட்டது.


ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறதேயன்றி, கற்றல் கற்பித்தலில் எவ்வித மாற்றமும் இல்லை. சில தனியார் சுயநிதி பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடங்கள் முழுமையாக கற்பிக்கப்படாத நிலை உள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதனால் மாணவர்களின் கற்றல் திறன் குறைவுபடுவதோடு அல்லாமல் அவர்களின் எதிர்கால வளர்ச்சியினையும் பாதிக்கும். எனவே 11-ம் வகுப்பிலுள்ள அனைத்து பாடங்களும் கருத்தியல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் முழுமையாக கற்பிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு எந்த வகையிலும் குறைவில்லாத நிலையில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடைபெறுவதை ஆய்வு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

தனியார் சுயநிதி பள்ளிகளின் வகுப்பறைகளில் 11-ம் வகுப்பு பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்படாதபோது மட்டுமே ஒரு மாணவனின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அந்த மாணவன் பெற்ற 11-ம் வகுப்பு மதிப்பெண்களை விட அதிக வேறுபாட்டுடன் இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அந்த பள்ளியில், 11-ம் வகுப்பு பாடங்கள் கற்பித்தலில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இதனால் மாணவர்களின் தரம் குறையும் நிலை ஏற்படும். எனவே, அத்தகைய நிலையில் கண்காணிக்க தவறிய பள்ளியின் மீது உரிய விதிகளின்படி விளக்கம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி பார்வையின்போது இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.