Header Ads

Header ADS

’உங்கள பாராட்டணும்.. மறுக்காம ஏத்துக்கோங்க..!’ அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விழா எடுத்த கிராமம் #HatsOff



எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்விப் புகட்டவும், அவர்களின் வாழ்க்கைக்குச் சரியான வழிகாட்டவும் வாய்ப்புள்ளவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களே! பல ஆசிரியர்கள் அவ்வாறு தங்களின் சிறப்பான பணியைச் செய்துவருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் ஆசிரியர் மணிமாறன்.
 
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், மேலராதாநல்லூர் எனும் உள் ஒடுங்கிய கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். பாடங்களை நடத்துவதோடு, மாணவர்களின் உளவியல், உடல் சார்ந்த பிரச்னைகளை அறிந்து, அவற்றுக்குத் தக்க தீர்வுக்கான முயற்சிகளை எடுத்துவருகிறார். அதேபோல, பாடப் புத்தகங்களைக் கடந்தும் சூழலியல், அறிவியல் புத்தகங்களை வாசிக்க வைக்கும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார். இன்னும் பல நல்ல விஷயங்களை முன்னெடுக்கும் ஆசிரியர் மணிமாறனுக்கு அந்தக் கிராமமே சேர்ந்து ஒரு விழா எடுத்துக்கொண்டாடியிருக்கிறது. இது குறித்து, அவரிடம் கேட்டேன்.

 
  ``ஒருநாள் கிராமத்திலிருந்து ஒரு பெரியவர் போன் செய்து, நாளை உங்களுக்கான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்றார். `அதெல்லாம் வேண்டாமே' என மறுத்தேன். அதற்கு அவர், 'நீங்கள் செய்துவரும் பல நல்ல விஷயங்களுக்காக, பாராட்ட வேண்டும் என நினைத்திருந்தோம். சமீபத்தில் அரசு அளிக்கும் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறீர்கள். அதை முன்னிட்டாவது இந்த விழாவை மறுக்காது கலந்துகொள்ள வேண்டும்' என வற்புறுத்தினார். அவரின் அன்புக்காக நானும் ஒத்துக்கொண்டேன்" என்கிறார் .

 

கிராமத்தின் கடைவீதியிலிருந்து ஆசிரியர் மணிமாறனுக்கு மாலை அணிவித்து, மேள தாள, வானவேடிக்கைகளுடன் பள்ளிக்கு அழைத்துவந்தனர் கிராம மக்கள். பள்ளி மாணவர்களின் வரவேற்பும், சக ஆசிரியர்களின் வாழ்த்துகளுடனும் விழாத் தொடங்கியது.

விழாவில் பேசியவர்கள் வாழ்த்துரையிலிருந்து சில:

அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த லூர்துசாமி: ``பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை வளர்க்கும் விதத்தில் மருத்துவக்கல்லூரியின் பிரேதப் பரிசோதனை மையத்துக்கே நேரடியாக அழைத்துச் சென்று, மூளை, நுரையீரல், இதயம் உள்ளிட்ட மனித உறுப்புகளைத் தொட்டுப் பார்க்க வைத்து பாடம் நடத்தும் மணிமாறனின் பணி பாராட்டுக்கு உரிய அம்சம்"


  புகழேந்தி - ஓய்வு பெற்ற உதவிக்கல்வி அலுவலர்: விடுமுறை நாள்களில் சிறப்பு பயிற்சிகள் அளித்து, தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களுடன் உரையாடல் நிகழ்த்த வைக்கிறார். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் வாசித்தவற்றை மேடையில் ஏற்றி அனைத்துக் குழந்தைகளையும் பேச வைத்தல் எனக் குழந்தைகளுக்காகவே வாழ்ந்து வருகின்றார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.