புற்று நோய்க்கு என்று காப்பீடு (இன்சூரன்ஸ்) உள்ளது.! பயன்படுத்தி கொள்ளுங்கள்.!!
‘ஜீவன் ஆரோக்யா’ என்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்கெனவே எல்.ஐ.சி விற்பனை செய்து வருகிறது. இதில் புற்றுநோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக ‘கேன்சர் கவர்’ என்ற பாலிசி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 1.31 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலிசிகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளடக்கிய தென் மண்டல அலுவலகத்தின் மூலம் மட்டும் 39,190 பாலிசிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
‘இந்த பாலிசியில் 20 முதல் 65 வயது வரையிலானவர்கள் சேரலாம். அதிகபட்ச காப்பீட்டுத் தொகை ரூ.50 லட்சம். ஆரம்பகட்ட புற்றுநோய்க்கு காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் ஒரே தவணையாகவும், நோய் முற்றிய நிலையில் முழு காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். மேலும், கட்ட வேண்டிய பிரீமியத் தொகையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
இத்துடன், காப்பீட்டுத் தொகையில் 1 சதவீதம் பாதிக்கப்பட்ட நபருக்கோ, இறந்தவரின் நியமன தாரருக்கோ ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு வழங்கப்படும் அம்சமும் இதில் உண்டு. பாலிசி காலம் 10 முதல் 30 ஆண்டுகள் வரை. குறைந்தபட்ச பிரீமியத் தொகையாக ஆண்டொன்றுக்கு ரூ.2,400 வசூலிக்கப்படுகிறது’ என்று இந்த திட்டம் பற்றி விவரிக்கிறார்கள் அதிகாரிகள்.
அதிகரித்து வரும் புற்றுநோய் அபாயம், மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல் செல்லும் அச்சம் போன்ற இன்றைய சூழலில், இப்படி ஒரு பாலிசி வரவேற்பைப் பெற்றதில் சந்தேகம் ஒன்றுமில்லைதான்!
No comments
Post a Comment