Header Ads

Header ADS

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவு ..



இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாகப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச் சுமையைக் குறைக்கக் கோரி, வழக்கறிஞர் புருஷோத்தமன் வழக்கொன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில், தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் நேற்று (செப்டம்பர் 25) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகப் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்று முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோருக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் ஆய்வு செய்து, இந்த உத்தரவு அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் நீதிபதி கிருபாகரன்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.