கேஜி வகுப்புக்கு உதவ அரசுப் பள்ளிக்குச் செல்லும் ஜி.வி.பிரகாஷ்!
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருவதை கல்வியாளர்கள் கவலையோடு சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்த நிலைமையைத் தடுக்கும் விதமாகப் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதில் தனது பங்களிப்பாக, இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், அரசு தொடக்கப்பள்ளிகளில் கேஜி வகுப்புகள் தொடங்கினால், பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்தார்.
அதனால், சென்னையிலுள்ள ஓர் அரசுப் பள்ளியைத் தேர்ந்தெடுத்து, கேஜி வகுப்பு ஆசிரியருக்கான ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்பள்ளியின் மாணவர்களோடு உரையாடி மகிழ்ச்சியூட்டினார். ஜி.வி.பிரகாஷின் இந்த முயற்சிக்குப் பின்புலமாக இருக்கும் லாவண்யா அழகேசன் மற்றும் குணசேகரன் ஆகியோருக்குத் தனது வீடியோ பதிவில் நன்றி தெரிவித்திருந்தார்.
நம்மிடம் பேசிய குனசேகரன், "ஜி.வி. பிரகாஷின் இந்த முயற்சி பலரின் பாராட்டுகளையும் பெற்றது. அமெரிக்காவிலுள்ள லாவண்யா அழகேசன், அரசுப் பள்ளிகளில் கேஜி வகுப்புகள் தொடங்க, அதற்கு உரிய ஆசிரியர் ஊதியத்தை ஏற்றுக்கொள்ள அனைவரையும் அழைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதன்
முதல் படியாக, லாவண்யா அழகேசன் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள ஒரு பள்ளியாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதை
அப்பள்ளிக்குத் தெரிவிக்கும் விதமாக, அக்டோபர் 3-ம் தேதி, ஜி.வி.பிரகாஷ் நேரடியாக அந்தப் பள்ளிக்குச் செல்லவிருக்கிறார்" என்றார்.
இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்த நண்பர்களை ஊக்குவிப்பதோடு, தானும் களத்தில் இறங்குகிறார் ஜி.வி.பிரகாஷ்.
No comments
Post a Comment