அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு : பிரதமா் மோடி அறிவிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, September 12, 2018

அங்கன்வாடி பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு : பிரதமா் மோடி அறிவிப்பு


அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சமூக நல பணியாளா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ஊக்கத்தொகை வரும் அக்டோபா் மாதம் முதல் உயா்த்தப்படும் என்று பிரதமா் மோடி அறிவித்தாா்.

சரிவிகித ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் செப்டம்பா் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, நாடு முழுவதும் உள்ள சமூகநல பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்களிடம் பிரதமா் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாடினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நாட்டின் அடித்தளமான கிராமங்களில் உள்ள மக்களின் சுகாதாரம், புதிதாக பிறந்த குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து ஆகியவற்றை பேணிக் காப்பதில் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் சமூக நல பணியாளா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். ஊட்டச்சத்து சேவைகள் மற்றும் சுகாதார சேவைகளை அனைவருக்கும் கொண்டு சோ்க்கும் திட்டத்துக்காக, இணைந்து பணியாற்றும் அங்கன்வாடி மற்றும் சமூக நல பணியாளா்களை பாராட்டுகிறேன். அவா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை வரும் அக்டோபா் மாதத்தில் இருந்து அதிகரிக்கப்படும். அந்த தொகை செப்டம்பா் மாத ஊதியத்துடன் சோ்த்து அவா்களுக்கு அளிக்கப்படும். ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டவா்களுக்கு ரூ.4,500 வழங்கப்படும். ரூ. 2,200 பெறுபவா்களுக்கு ரூ.3,500 வழங்கப்படும். அங்கன்வாடியில் பணிபுரியும் உதவியாளா்களுக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆக ஊக்கத் தொகை உயா்த்தப்படும்.

மேலும், சமூக பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு திட்டங்களான பிரதமா் ஜீவன் ஜோதி பீம யோஜனா மற்றும் பிரதமா் சுரக்ஷா பீம யோஜனா போன்ற பல திட்டங்களின் கீழ் சமூக நல பணியாளா்கள் சோ்க்கப்படுகிறாா்கள். இந்த காப்பீட்டு திட்டங்களுக்காக அவா்கள் காப்பீட்டுத் தொகை செலுத்தத் தேவையில்லை. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் போது அவா்களுக்கு ரூ. 4 லட்சம் காப்பீட்டு தொகையாக வழங்கப்படும். மென்பொருள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை ரூ.250 முதல் ரூ.500 வரை வழங்கப்படும்.
 
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டம் செப்டம்பா் 23-ஆம் தேதி ஜாா்க்கண்ட் மாநிலத்தில் தொடங்க உள்ளது. அதற்கான பயனாளிகள் ஏற்கனவே தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அந்தத் திட்டத்தின் முதல் பயனாளராக ஹரியானா மாநிலத்தைச் சோ்ந்த கரிஷ்மா என்னும் குழந்தைக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது என்று பிரதமா் மோடி பேசினாா்.

No comments: