புகார் அளித்து 15 நாட்கள் ஆகாத மனுக்களை ஏற்கக் கூடாது!
காவல் துறையினரிடம் புகார் அளித்து 15 நாட்கள் ஆகாத நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை நீதிமன்றப் பதிவுத் துறை
ஏற்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அப்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒரு மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது.
இவற்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், புகார்தாரர் முதலில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்படி புகார் செய்து, காவல் துறையினர் ஏழு நாட்களில் வழக்கு பதிவு செய்யாத நிலையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என்று அறிவுறுத்தினர்.
இதையடுத்து, மாவட்ட எஸ்பியும் நடவடிக்கை எடுக்காத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்து 15 நாட்களாகியும், எந்த நிவாரணமும் கிடைக்காத சூழலில் மட்டுமே, புகார்தாரர் உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments
Post a Comment