ஜியோவுக்கு வந்தது ஆப்பு! ஹலோ வோடபோனா.. ஹலோ ஐடியாவா.. இனி இரண்டும் ஒன்றே..
டெல்லி: வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய இரு செல்போன் நிறுவனங்களும் ஒன்றாக இணைந்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இவை உருவெடுத்துள்ளன.
வெள்ளிக்கிழமையன்று இணைப்பு தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடைந்தன. இதன் மூலம் வருவாய் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் இந்த நிறுவனமே இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இணைப்பின் காரணமாக முகேஷ் அம்பானியின் ஜியோ பெரும் சவாலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. உள்ளூர் தொலைத் தொடர்புத்துறையில் ஜியோ ஏற்படுத்திய பாதிப்பு கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் வோடபோன்- ஐடியா இணைப்பால் இனியும் ஜியோவால் முன்பு போல தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்பு ரூ. 1.6 லட்சம் கோடி மதிப்பிலானதாகும். கடந்த பிப்ரவரி மாதம் இதுதொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது அது முழுமை பெற்றுள்ளது.
இந்திய செல்போன் துறையின் வருவாயில் இந்த இணைந்த நிறுவனங்களின் பங்கு 40 சதவீதமாக இருக்கும். மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கும். இது ஏர்டெல் நிறுவனத்தை விட அதிகமானதாகும்.
புதிய நிறுவனத்தின் போர்டில் 12 இயக்குநர்கள் இருப்பார்கள். குமார் மங்கலம் பிர்லா தலைவராக இருப்பார். பாலேஷ் சர்மா தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார்.
ஐடியா செல்லுலார் நிறுவன நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து ஹிமன்ஷு கபானியா விலகி விட்டார். இருப்பினும் அவர் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினர் அல்லாத செயல் இயக்குநராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment