மாதிரி பள்ளி திட்டம் துவக்கி வைப்பு நவீன ஆய்வகம், டிஜிட்டல் நூலகத்துடன் வசதிகள் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 16, 2018

மாதிரி பள்ளி திட்டம் துவக்கி வைப்பு நவீன ஆய்வகம், டிஜிட்டல் நூலகத்துடன் வசதிகள்


சென்னை:நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில், மாதிரி பள்ளி திட்டத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.


'நவீன ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளுடன், மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி துவக்கப்படும்' என, சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதன்படி, மத்திய அரசின் பங்களிப்புடன் கூடிய, மாதிரி பள்ளிகள் திட்டம், நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

சென்னையில், எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாதிரி பள்ளி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 50 லட்சம் ரூபாயில், நவீன ஆய்வகம், டிஜிட்டல் நுாலகம், வண்ணமயமான வகுப்பறை, ஆர்.., சுத்திகரிப்பு குடிநீர் வசதி, மழலையர் பள்ளி ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
   
மாதிரி பள்ளி திட்டத்தை துவக்கி வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என, 32 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிகளில் எந்த மாதிரியான நவீன வசதிகள் உள்ளனவோ, அந்த வசதிகள் அனைத்தும், மாதிரி பள்ளிகளில் இருக்கும். தரமான குடிநீர், வகுப்பறை, ஆய்வகம் மற்றும் சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வழியே கற்பித்தல் என, புதுமையை புகுத்தி, மாதிரி பள்ளிகள் செயல்படும்.

தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும் படித்து முடிக்க, மாதிரி பள்ளிகள் உதவியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் கூறுகையில், ''மாதிரி பள்ளிகளின் செயல்பாடுகளும், கல்வி தரமும், மற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.

''அங்குள்ள ஆசிரியர்கள், மாதிரி பள்ளிகளை வந்து பார்த்து விட்டு, தங்கள் பள்ளிகளையும் அதேபோல், மாற்ற வேண்டும்,'' என்றார்.விழாவில், உயர் நீதிமன்ற நீதிபதியும், மாநில மகளிர் பள்ளி, முன்னாள் மாணவியுமான, பவானி சுப்பராயன், விஜயகுமார் எம்.பி., - நட்ராஜ் எம்.எல்.., - பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரி, திருவளர் செல்வி, பள்ளி தலைமை ஆசிரியை, கண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



'திறன் வளர்ப்பு மையங்கள்'

 

அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்புகள்:

* வரும் கல்வி ஆண்டு முதல், ஒன்று முதல் 5ம் வகுப்புக்கும், 6 முதல் 8ம் வகுப்புக்கும், தனியார் பள்ளிகளை போன்று, பல வண்ணங்கள் கலந்த சீருடைகள் அறிமுகம் செய்யப்படும்

* மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்பிலேயே, இலவச சைக்கிள் மற்றும் லேப்டாப் வழங்கப் பட உள்ளது

* மாநிலம் முழுவதும், 3,000 பள்ளிகளில், ஸ்மார்ட் வகுப்புகள்; நவீன ஹைடெக் ஆய்வகங்களுக்கான பணிகள், ஒரு மாதத்தில் துவங்கும்



* பள்ளிக்கு மாணவியர் சென்று வரும்போது ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க, 14417 என்ற, தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

* 'இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை இல்லை; 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலாவது வேலை வேண்டும்' என, இன்ஜினியரிங் முடித்த பல இளைஞர்கள் கேட்கும் நிலை உள்ளது. எனவே, பள்ளியிலேயே வேலை வாய்ப்பு கல்வியை பெற, திறன் வளர்ப்பு மையங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: