அரசு பள்ளிகளை தத்தெடுக்க பலர் ஆர்வம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
சென்னை: ''அரசு
பள்ளிகளை தத்தெடுக்க, பலர் ஆர்வமாக முன்வந்துள்ளனர்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.மாணவர்கள், தயக்கமில்லாமல், தடுமாறாமல், பாலியல் வன்முறைகளுக்கு இடம் தராமல், கல்வி கற்பது தொடர்பாக, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'பயமில்லா கற்றல்' என்ற பெயரில், சுவரொட்டிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, அமைச்சர், செங்கோட்டையன், நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ், ஐ.நா., சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' மண்டல புள்ளியியல் ஆலோசகர், சைலேந்திர ஷிக்டல். மண்டல நல்வாழ்வு கல்வி பிரதிநிதி சரிட்டா ஜாதவ், மாநில திட்ட இயக்குனர், சுடலைக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அறிவிப்பு பலகை :
இந்நிகழ்ச்சியில், அமைச்சர், செங்கோட்டையன் அளித்த பேட்டி:குழந்தைகளுக்கு, பயமில்லாமல் கற்பது எப்படி என்பதுடன், தொடுதலில் உள்ள வித்தியாசம் குறித்தும், மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை யும், பாடத்திட்டமாக கொண்டு வர உள்ளோம்.தமிழகத்தில் உள்ள, 57 ஆயிரத்து, 382 பள்ளிகளிலும், 'பயமில்லா கற்றல்' சுவரொட்டிகளை, பள்ளி அறிவிப்பு பலகையில் வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள், தங்களுக்கு இடர்பாடு ஏற்பட்டால், 14417 என்ற, உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். 24 மணி நேரத்திற்குள், போலீசார் உதவியுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், 1098 என்ற, எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். புகார்களை ஒருங்கிணைத்து, நடவடிக்கை எடுக்க, உதவி கமிஷனர் அந்தஸ்துள்ள அதிகாரியை நியமிக்கும்படி, போலீஸ் கமிஷனருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பாலியல் கல்வி குறித்து, வாரத்தில் ஒரு நாள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். அரசு பள்ளிகளில், மாணவியருக்கு, 'சானிடரி நாப்கின்' வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.அரசு பள்ளிகளை தத்தெடுக்க, பலர் முன்வந்து உள்ளனர். நடிகர், ராகவா லாரன்ஸ், என்னை சந்தித்து, ஒரு பள்ளியில், 10 வகுப்பறைகளை, தத்து எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர், பாரிவேந்தர், ராமாபுரம் மேல்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் அமைக்க, 10 லட்சம் ரூபாய் தருவதாக தெரிவித்துள்ளார்.இவ்வாறு முன்வருவோரை ஒருங்கிணைத்து, பணிகள் மேற்கொள்ள, முதன்மை கல்வி அலுவலர் கீழ், தேசிய விருது பெற்ற ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். பொங்கல் பண்டிகைக்கு முன், அனைத்து பள்ளிகளிலும், புதிய வர்ணம் பூசப்பட உள்ளது. 'ரோட்டரி கிளப்' உதவியுடன், கழிப்பறை இல்லாத பள்ளிகளில், அந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.மத்திய நல்லாசிரியர் விருது, தமிழகத்தில், 36 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஊக்கத் தொகை : செப்., 5ல், சென்னை, கலைவாணர் அரங்கில், மாநில நல்லாசிரியர் விருது பெறும், 379 பேர் கவுரவிக்கப்பட உள்ளனர். அத்துடன், தமிழ் வழி கற்கும் மாணவர்களின், 960 மாணவர்களுக்கு,ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட, சிறப்பாசிரியர்களுக்கு, விரைவில், பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Post a Comment