புத்தகத்துக்கு முன்னே வெளியான வழிகாட்டி: புதிய சர்ச்சை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 15, 2018

புத்தகத்துக்கு முன்னே வெளியான வழிகாட்டி: புதிய சர்ச்சை


புத்தகத்துக்கு முன்னே வெளியான வழிகாட்டி: புதிய சர்ச்சை!
புதிய பாடத்திட்டங்களின் கீழ் புத்தகங்கள் வெளிவருவதற்கு முன்பே, 11ஆம் வகுப்புக்கான வழிகாட்டி விற்பனைக்கு வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.




இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில், சுரா மற்றும் பிரீமியர் பதிப்பகங்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகப் புதிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

1, 6, 9, 11 ஆகிய வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டப் பணிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. குறிப்பாக, 1, 6, 9 ஆகிய வகுப்புகளுக்கான புத்தகங்கள் முன்கூட்டியே குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், 11ஆம் வகுப்புக்கான புத்தகங்கள் ஜூன் 2ஆவது வாரத்தில் காலதாமதமாக வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் நிறைய சதியிருப்பதாகக் கல்வியாளர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சுரா மற்றும் பிரீமியர் ஆகிய இரண்டு பதிப்பகங்கள், பள்ளிக் கல்வித் துறையின் துணைகொண்டு முன்கூட்டியே பாடத்திட்டத்துக்கான விரிவான வழிகாட்டிகளை அச்சிட்டு வியாபாரம் செய்து வருவதாகக் கூறினர். 11ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவித்ததால், முன்கூட்டியே பள்ளிகளில் பாடங்களை நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தைச் செயல்படுத்தும் வகையில் இந்த வழிகாட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த விற்பனை பலகோடி ரூபாய் சம்பந்தப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

 

புத்தகம் வெளியீடுவதற்கு முன்பாகவே வழிகாட்டி தயாரித்து வெளியிட்ட இரண்டு பதிப்பகங்கள் மீது, மாநிலப் பாட நூல் குழுவின் சார்பில் ஒரு புகார் ஒன்று சிபிசிஐடி தரப்பில் அளிக்கப்பட்டது. காப்புரிமை பெறாமல் வெளியிடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும் பிரிவின் கீழ், சிபிசிஐடியில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கத்துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் எப்படி கிடைத்தது என்றும், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்றும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாடத்திட்டத்தைத் தயாரித்த குழு மற்றும் அச்சகங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: