மறுமதிப்பீடுக்கு மார்க் தர ரூ200 கோடி லஞ்சம்? : 10 பேராசிரியர்களிடம் விசாரணை : மேலும் பலர் சிக்க வாய்ப்பு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், விடைத்தாள் மறுகூட்டலின்போது தேர்ச்சி பெற வைக்க ஒவ்வொரு மாணவரிடமும் ரூ10 ஆயிரம் வீதம், பல்லாயிரம்
பேரிடம் லஞ்சம் வாங்கியதால் மட்டும் ரூ200 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருக்கும் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது
குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 593 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் தேர்வில் தோல்வியடைந்தவர்களின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிக்கு மட்டும் பல்கலைக்கழகத்தின் சார்பில் 23 மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 2017ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நடந்தது. தேர்வு எழுதியவர்களில் 3 லட்சத்து 2 ஆயிரத்து 380 மாணவர்கள் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் மூலம் ரூ.75 கோடி கட்டணமாகவே பல்கலைக்கழகம் வசூலித்தது. விண்ணப்பித்த மாணவர்களில் 73 ஆயிரத்து 733 பேர்
தேர்ச்சி பெற்றதோடு, 16 ஆயிரத்து 636 மாணவர் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக கல்லூரியிலும் செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள் மறுமதிப்பீடு பணி நடந்தது. இந்த கல்லூரியில் நடந்த விடைத்தாள் மறுமதிப்பீட்டில் தேர்வில் தோல்வியடைந்த சில மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்ததுள்ள விவரம் வெளியானது. இதுதொடர்பாக மீனா என்பவர் உரிய ஆதாரங்களுடன் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திண்டிவனத்தில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியர்கள் மற்றும் விடைத்தாள் மறுகூட்டல் செய்த பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலரின் வழிகாட்டுதல்கள்படியே விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
அதன்
அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலராக 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பதவி வகித்த உமா, திண்டிவனம் பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் விஜயகுமார்(திண்டிவனம் மண்டல முன்னாள் ஒருங்கிணைப்பாளர்), திண்டிவனம் பல்கலைகழக கல்லூரி கணிதவியல் உதவிப் பேராசிரியர் சிவக்குமார் உள்பட 10 பேர் மீது
ஐபிசி 120(பி), 167, 201, 420, 468, 471, ஊழல் தடுப்புபிரிவு 13(1)(டி), 13(2) ஆகிய 8 பிரிவுகளில் லஞ்சஒழிப்பு போலீசார் ஜூலை 31ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து கோட்டூர்புரத்தில் உள்ள உமாவின் வீடு மற்றும் ஊழியர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அதில், உமாவின் வீட்டில் முறைகேடு நடந்ததற்கான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. மாணவர்களின் விடைத்தாள்கள், பல கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்களும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால், லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகளின் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. மேலும், முறையாக விடைத்தாள் திருத்த அனுமதிக்கப்படாத பேராசிரியர்கள் முறைகேடு தொடர்பான வலுவான ஆதாரங்களை லஞ்சஒழிப்பு போலீசாரிடம் வழங்கியுள்ளனர். சென்னை மற்றும் திண்டிவனத்தில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்காக அமைக்கப்பட்ட மையங்களையும் லஞ்சஒழிப்புப்பிரிவு போலீசார் ஆய்வு செய்துள்ளனர்.
முறைகேடாக பணம் சம்பாதிப்பதற்காகவே பல மாணவர்களை வேண்டுமென்றே தேர்வில் தோல்வியடைய வைத்ததாகவும், சிலரை முன்கூட்டியே தோல்வி அடைய வைப்போம் முன் கூட்டியே பணம் தரவேண்டும் என்று ரூ10 ஆயிரம் வரை வசூலித்ததாகவும், பணம் கொடுக்காதவர்கள் நன்றாக தேர்வு எழுதியும் தோல்வி அடைய வைத்ததாகவும் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தாங்கள் சொல்லும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்காவிட்டால் தனியார் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று உமா மறுமதிப்பீட்டுக்கு வந்த தனியார் கல்லூரி பேராசிரியர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், ஒரு மாணவருக்கு ரூ10 ஆயிரம் வீதம், பல ஆயிரம் மாணவர்களிடம் சுமார் ரூ200 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றுக்கொண்டு, மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் விடைத்தாள் மறுமதிப்பீடு தொடர்பான ஆவணங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமிருந்த 10 சதவீத ஆவணங்கள் மட்டுமே தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த முறைகேடு தொடர்புடைய அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரிடமும் லஞ்சஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எஜென்ட்களின் துணையோடு 6 செமஸ்டர்களில் ரூ200 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்சஒழிப்பு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதேபோல் அதில் பெரும் பகுதி பணத்தை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரிடம் உமா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த முறைகேடு குற்றச்சாட்டை உமா மறுத்துள்ளார். சட்டப்படியே அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து மாணவர்களிடம் பணம் பெற்று முறைகேடான வகையில், மறுதிப்பீட்டில் மதிப்பெண் வழங்கிய 10 பேர், அத்துடன் தொடர்பு உடையவர்கள் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக கல்வியாளர்கள்
பிரபாகரன், ராஜராஜன் கூறியதாவது: ஏப்ரல், மே மாதம் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியானது. ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதனையடுத்து மாணவர்கள் மறுமதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தனர், அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து தலா 10ஆயிரம் பெற்றுக்கொண்டு 70 ஆயிரம் மாணவர்களை தேர்ச்சி பெற செய்ததுடன், 16 ஆயிரம் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்
வழங்கியதாக எழுந்துள்ள குற்றச்சட்டின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு துறை கட்டுபாட்டு அதிகாரி உமா உள்ளிட்ட 10பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கல்வியாளர்கள் பிரபாகரன், ராஜராஜன் கூறினார்கள்.
துணைவேந்தர் கனவு தகர்ந்தது
பேராசிரியை உமா, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை பெற தீவிரமாக முயன்றார். இதனால் 10 பேர் பதவியை பிடிக்க போட்டியிட்டனர். அதில் உமாவும் முன்னணியில் இருந்தார். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயார் என்றும், துணைவேந்தர் பதவியை பிடிப்பதுதான் என்னுடைய கனவு என்றும் கூறி வந்துள்ளார். ஆனால் இந்த முறைகேட்டில் சிக்கியதால், அவர் கனவு தகர்ந்ததாக கூறப்படுகிறது.
No comments
Post a Comment