எட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த சிவசங்கரி!
ஜவுளிக்கடையில் துணி எடுக்கச் சென்றபோது கடை உரிமையாளர் கவனக்குறைவாக துணியுடன் கொடுத்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை பத்திரமாக கடை உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்த பெண்ணிற்கு
பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சிவகாசி அருகே சாட்சியாபுரத்தை சேர்ந்த தையல் தொழிலாளியான சிவசங்கரி என்ற பெண் தனது அண்ணன் மகளுடன் நேற்று தையல் பணிக்கான துணி வாங்குவதற்காக சிவகாசி தெற்கு ரத வீதியில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது துணிகளை தேர்வு செய்துவிட்டு பணத்தை கொடுத்த பின்னர் தேர்வு செய்த துணியை கடை உரிமையாளர் பையில் வைத்து சிவசங்கரியிடம் கொடுத்துள்ளார். கடை உரிமையாளர் துணி பையுடன் மேசையில் கவரில் வைத்திருந்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தையும் சேர்ந்து கவனக்குறைவாக கொடுத்துள்ளார்.
புதிய துணிப்பையை வாங்கும்போது கவனிக்காத சிவசங்கரி வீட்டில் சென்று வாங்கிய புதிய துணியை தைப்பதற்காக எடுத்தபோது துணியுடன் 2ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் கட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக என்ன செய்வது என தெரியாமல் அவரது சகோதரரை அழைத்து சென்று ஜவுளிக்கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளார் சிவசங்கரி. இதனைக் கண்டு கடை உரிமையாளர் மற்றும் கடை ஊழியர்கள் பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.
இதனிடையே முன்னதாக பணம் காணாமல் போன உடன் காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கடைகளில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் சிவசங்கரி நேர்மையாக நடந்துகொண்டு பணத்தைகடையில் கொண்டு சென்று கொடுத்ததால் காவல்துறையினரும் சிவசங்கரியை வெகுவாக பாராட்டினர்.
பணம்
மட்டுமே பெரிதாக எண்ணும் இந்தக் காலத்தில் தவறுதலாக துணிப்பையில் இருந்த எட்டரை லட்சம் ரூபாய் பணத்தை நேர்மையுடனும், கண்ணியத்துடனும் திரும்ப செலுத்திய தையல் தொழிலாளி சிவசங்கரிக்கு சமூக வலைத்தளங்களிலும், போனிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
தான்
எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றாலும் வயிற்றுப்பிழைப்பிற்கு தையல் வேலை பார்த்து தனது குடும்பத்தை நடத்தி வருவதாக சிவசங்கரி கூறியுள்ளார். இந்தப் பணம் பெரிய தொகையாக இருந்தாலும் தான் உழைத்து சம்பாதித்த பணம் மட்டுமே நமக்கு சொந்தம். மற்றவர்களின் பணம் தமக்கு தேவையில்லை என்பதால் உடனடியாக பணத்தை திருப்பி செலுத்தியதாக சிவசங்கரி நேர்மையுடன் கூறுகிறார். பணத்தை திருப்பி செலுத்தும் வரை தனக்கு பணம் மிகுந்த பாரமாக இருந்த நிலையில் பணத்தை திருப்பி செலுத்தியவுடன் மனதில் உள்ள பாரங்கள் குறைந்து மிகுந்த நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டதாகவும் சிவசங்கரி தெரிவித்துள்ளார். இந்தச் செயலுக்கு காவல்துறையினர், பொதுமக்கள் என பலவேறு தரப்பினர் பாராட்டி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பெருமிதம் கொள்கிறார் சிவசங்கரி.
கவனக்குறைவினால் பணம் தவறினாலும் உடனடியாக சிவசங்கரி திருப்பி செலுத்திய நிகழ்வு தங்களுக்கு மிகுந்த பிரமிப்பையும் அதிர்ச்சியாகவும் தந்ததாககூறும் கடை ஊழியர்கள் சிவசங்கரியின் செயலைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை எனவும் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
No comments
Post a Comment