ஆசிரியர் பணிக்கு இரு போட்டித் தேர்வா? துக்ளக் முடிவை அரசு மாற்ற வேண்டும்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, July 26, 2018

ஆசிரியர் பணிக்கு இரு போட்டித் தேர்வா? துக்ளக் முடிவை அரசு மாற்ற வேண்டும்!


டாக்டர் ராமதாஸ் --அறிக்கை---
தமிழ்நாட்டில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் ஆகிய பணிகளுக்கு இனி இரண்டு போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், இரு தேர்வுகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு மட்டும் தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவு சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல துக்ளக்தனமானதும் கூட. இது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் 2011-ஆம் ஆண்டு வரை அனைத்து நிலை ஆசிரியர் பணியிடங்களும் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் தான் நிரப்பப்பட்டன. இடையில் 2001-06 அதிமுக ஆட்சிக்காலத்தில் சில ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக பின்னர் வந்த திமுக ஆட்சியில் அம்முறை கைவிடப்பட்டது.

ஆனால், கல்வி பெறும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாலும், அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளிப்பதாலும் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு திணித்தது. 2011-ஆம் ஆண்டில் ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசு இதை எதிர்ப்பில்லாமல் ஏற்றுக் கொண்டது. இப்போது ‘‘தகுதித்தேர்வு என்பது இனி தகுதி நிர்ணயத் தேர்வாக மட்டுமே கருதப்படும். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரடியாக வேலை வழங்கப்படாது. அவர்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் ஆசிரியர் பணி நடத்தப்படும்’’ என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான அரசாணை கடந்த 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டு நேற்று வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் தகுதித் தேர்வு என்ற பெயரில் தொடர்ந்து சமூக அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. சமூக அநீதியைப் போக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழும் போதெல்லாம், முந்தைய சமூக அநீதியைப் போக்குவதாகக் கூறி, அதைவிட பெரிய சமூக அநீதியை திணிப்பதை அதிமுக அரசு வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் அனைவருக்கும் ஒரே விதமாக 60% என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது அநீதியானது என்றும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு குறைவான தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும் என்று குரல் எழுந்த போது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்ணை 55% ஆக குறைத்த தமிழக அரசு, வெயிட்டேஜ் மதிப்பெண் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இது சமவாய்ப்புக்கு எதிரானது என்பதால் இதை நீக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை நீக்கியுள்ள தமிழக அரசு, அதற்குப் பதிலாக போட்டித் தேர்வு முறையை அறிமுகம் செய்துள்ளது. ஊரக, ஏழை மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் தமிழக அரசு இப்படியெல்லாம் செய்கிறது என்பதை உணர முடிகிறது.

எந்தப் பின்னணியும் இல்லாத ஊரக, ஏழை மாணவர்கள் தகுதித் தேர்வுக்காக தனிப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று அத்தேர்வில் வெற்றி பெறுவதற்குள்ளாகவே தங்கள் குடும்பச் சொத்துக்களில் பாதியையும், தங்களின் வாழ்நாளில் சில ஆண்டுகளையும் இழந்து விடுகின்றனர். ஆனாலும், ஒருமுறை தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் 7 ஆண்டுகளுக்கு அது செல்லும் என்பதால், அதற்குள் எப்படியாவது அரசு ஆசிரியர் பணி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை தான் அவர்களை இயக்கி வந்தது. ஆனால், இப்போது போட்டித் தேர்விலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் அதற்கான பயிற்சிக்காக தங்களிடமுள்ள மீதி சொத்துக்களையும் இழக்க நேரிடும். ஆசிரியர் பணியிடங்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தான் காலியாக உள்ளன என்பதால் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் போட்டித்தேர்வுகள் நடத்தப்படக்கூடும். ஒருவர் இருமுறை போட்டித் தேர்வுகளில் தோல்வியடைந்து விட்டால், அதற்குள் 7 ஆண்டுகள் முடிவடைந்து அவரது தகுதித் தேர்வு தேர்ச்சியும் செல்லாததாகிவிடும். அவர் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி ஆசிரியர் பணிக்கு செல்வது என்பது எட்டாவது அதிசயமாகவே அமையும்.

இதில் கொடுமை என்னவென்றால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை விட அதிக ஊதியமும், அதிக தகுதி நிலையும் கொண்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது; அவர்களுக்கு தகுதித் தேர்வு என்பது கிடையாது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிகளுக்கு போட்டித் தேர்வு கிடையாது; தகுதித் தேர்வு மட்டும் தான் உண்டு. அதிலும் கூட, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வும் கிடையாது; நேர்காணல் மட்டுமே போதுமானது. அவ்வாறு இருக்கும் போது தொடக்க நிலை வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மட்டும் இரு போட்டித்தேர்வுகள் நடத்துவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இம்முடிவை தமிழக அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.

அனைத்து வகையான ஆசிரியர் பணியிடங்களுக்கு முன்பிருந்தவாறே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். அதுதான் முழுமையான சமூக நீதியாக அமையும். ஒருவேளை இது உடனடியாக சாத்தியமில்லை என்றால், அனைத்து நிலை ஆசிரியர் பணிகளுக்கும் ஒரே ஒரு போட்டித்தேர்வு நடத்தும் வகையில் நியமன முறையை மாற்றியமைக்க வேண்டும்.

No comments: