குரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்பு : 11,270 பேரை நியமிக்க டி.என்.பி.எஸ்.சி., முடிவு
'குரூப் - 4' தேர்வில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன், 2,000 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தேர்வின் வழியே, 11 ஆயிரம்
காலியிடங்களை நிரப்ப உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
'குரூப் - 4' ல் கூடுதலாக 2,000 இடங்கள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 9,351 பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, இந்த ஆண்டு, பிப்., 11ல் நடத்தப்பட்டது. தேர்வில், மாநிலம் முழுவதும், 17.53 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள், ஐந்து மாதத்திற்குப்பின், நேற்று முன்தினம் வெளியாகின.
முடிவுகள்,http://results.tnpsc.gov.in மற்றும், http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதில், 15 லட்சத்து, ௨,௦௦௦ பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்வு முடிவு குறித்து, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர், நந்தகுமார் ஆகியோர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:பிப்., 2018ல் நடத்தப்பட்ட, குரூப் - 4 தேர்வு, இந்தியாவிலேயே ஒரே நாள் தேர்வில், அதிக விண்ணப்பங்களை பெற்று, நடத்தப்பட்ட தேர்வு.
இதன்
முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதைய நிலையில், தோராயமாக, 33 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் பட்டியல், விரைவில் அறிவிக்கப்படும்.ஆக.,16 முதல், 30 வரை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, இ - சேவை மையங்களுக்கு சென்று, தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அவற்றை, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரிகள் ஆய்வு செய்த பின், அக்டோபரில் இட ஒதுக்கீடுக்கான கவுன்சிலிங் நடக்கும்.இந்த தேர்வின் வழியே, வி.ஏ.ஓ., பதவியில், 494 காலியிடங்கள் உட்பட, பல்வேறு பதவிகளுக்கான, 9,351 இடங்கள் நிரப்பப்படும்; இடங்களின் எண்ணிக்கை, மாறுதலுக்குரியது என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, தற்போது கூடுதலாக, 1,929 இடங்கள் நியமன பட்டியலில் சேர்ந்துள்ளன.வி.ஏ.ஓ., - 1,107; பிணையமற்ற இளநிலை உதவியாளர் பதவி, 4,722; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர் பதவி, 226; வரிவசூலிப்பாளர், 52; தட்டச்சர், 3,974; சுருக்கெழுத்தர், 931; கள ஆய்வாளர், 102 மற்றும் வரைவாளர், 156 என, 11 ஆயிரத்து, 270க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த எண்ணிக்கையும், கவுன்சிலிங்
நடக்கும் வரை மாற வாய்ப்புள்ளது.
86 சதவீதம், 'பாஸ்'பெண்கள் அமோகம்
குரூப் - 4 தேர்வில், 17.53 லட்சம் பேர் பங்கேற்றதில், 15.02 லட்சம் பேர், அதாவது, 86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்களில், 7.97 லட்சம் பேரும்; ஆண்களில், 6.28 லட்சம் பேரும், மூன்றாம் வகை பாலினத்தில், 35; மாற்று திறனாளிகள், 17 ஆயிரம்; விதவைகள், 5,000 மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், 2,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தட்டச்சர் பதவிக்கு, 74 ஆயிரத்து, 555 பேரும்; சுருக்கெழுத்தர் பதவிக்கு, 1,446 பேரும் தேர்ச்சி பெற்றனர். வி.ஏ.ஓ., உள்ளிட்ட மற்ற ஆறு வகை பதவிகளுக்கு, 14.26 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குரூப் - 4 தேர்வில், சைதை துரைசாமியின் மனிதநேயம் பயிற்சி மையத்தில் படித்தவர்களில், திருநாவுக்கரசு என்பவர், மாநில அளவில், 14வது இடம் பிடித்துள்ளார். செல்வகுமார், 33; கிருத்திகா, 114 மற்றும் கோபி, 731 ஆகிய இடங்களை பெற்றுள்ளனர்
No comments
Post a Comment