ஓய்வூதிய கோரிக்கை -அரசு மேற்கொண்ட அசர வைக்கும் அதிரடி மாற்றங்கள் - செல்வ. ரஞ்சித் குமார்
அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஓய்வூதியக் கோரிக்கை! விடியலரசு மேற்கொண்ட அசரவைக்கும் அதிரடி மாற்றங்கள்!!
✍🏼செல்வ.ரஞ்சித் குமார்
2003-ல் அஇஅதிமுக அரசு தொடர் போராட்டங்களின் காரணமாக தாம் பறித்த பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான வல்லுநர் குழுவை 22.02.2016-ல் அமைத்தது அப்போதைய அஇஅதிமுக அரசு. பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் 7 முறை காலநீட்டிப்பு செய்யப்பட்டு இறுதியாக 27.11.2018-ல் வல்லுநர் குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. 2021 ஏப்ரல் வரை ஆட்சியிலிருந்த அஇஅதிமுக இதில் அடுத்த கட்டமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த திமுகவின் விடியலரசு 2021-22 பட்ஜெட்டின் ஓய்வூதியம் தொடர்பான மானியக் கோரிக்கைக் கொள்கை விளக்கத்தில் வரிசை எண் 11-ல் வல்லுநர் குழு எனும் தலைப்பில் தனது பதிலை அளித்தது.
1111111111111111
அதனைத் தொடர்ந்து தற்போதைய 2024-25ஆம் ஆண்டிலும் தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஓய்வூதிய மானியக் கோரிக்கை கொள்கை விளக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விடியலரசு பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வந்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு. . . .
2021-22 பத்தி எண்.11:
தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவுகளை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016 ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
2022-23 பத்தி எண்.12:
தற்போதுள்ள வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசு பணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற் பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையினை 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அது அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது.
2023-24 பத்தி எண்.9:
வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது 27-11-2018 அன்று அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
1111111111111111111
2024-25 பத்தி எண்.8:
வரையறுக்கப்பட்ட பயன்தரும் ஓய்வூதியத் திட்டத்தை தொடர பல்வேறு அரசுபணியாளர்கள் / சங்கங்களின் கோரிக்கையை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து, பொருத்தமான முடிவினை மேற்கொள்ள அரசிற்கு பரிந்துரைக்க ஏதுவாக 2016-ஆம் ஆண்டில் ஒரு வல்லுநர்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த 4 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் ஓய்வூதியக் கோரிக்கையைப் பொறுத்தவரை விடியலரசானது தனது கொள்கை விளக்கக் குறிப்பேட்டினில்,
அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .
அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது. . . .
அரசால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. . . .
அறிக்கையானது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. . . .
என்று பல்வேறு அதிரடி அச்சு மாற்றங்களைச் செய்துள்ளது.
Incentive, EL Surrender, SG Teacher Pay, SG Teacher - BT Promotion, HM Promotion, State Level Transfer. . .etc என்று விடியலரசின் விண்ணைமுட்டும் செய்கைகளால் விழி வியர்த்துப் போயுள்ள ஆசிரியர் சமூகமானது தற்போது Pension கோரிக்கை தொடர்பான அதிரடி மாற்றங்களைக் கண்டு அரசு ஊழியர்களுடன் சேர்ந்து மெய்சிலிர்த்து மின்சார வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருக்கிறது.
மேலும் இதையெல்லாம்விட, விடியலரசின் இச்சிறப்பான செய்கையைப் பாராட்டி பல்வேறு சங்கங்களின் நன்றி அறிவிப்புப் பதாகைகளாலும் - புகைப்படங்களாலும் - பூங்கொத்துகளாலும் சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பிக்க வாய்ப்புள்ளதால் அரசு ஊழியர் & ஆசிரியர் சமூகம் எந்தக் குளத்தில் குதித்துத் தமது பிறவிப் பயனை முழுமைப்படுத்துவது என்பது குறித்துத் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.
No comments
Post a Comment