2G,3G ,4G ,5G என்றால் என்ன? இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
2G,3G ,4G ,5G என்றால் என்ன? இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
G என்பது GENERATION என்கிற ஆங்கில சொல்லைக் குறிக்கும். அதாவது தலைமுறை! முதன்முதலாக அறிமுகமான 0G தொலைத் தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத் தொடர்பு சேவையும் தனித்தனி பெயரிடப்பட்டுக் குறிக்கப்பட்டன.
1G சேவை :
G என்கிற ஆங்கில எழுத்தைக் கண்டதும் அனைவரும் அது இன்டர்நெட் வசதியைக் குறிக்கிறது என்றே நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை. முதன் முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் சேவைதான் 1G சேவை. 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது.
அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானபோது 2.4 முதல் 14.4 kbps வேகத்தை மட்டுமே கொண்டதாக இருந்தது. அன்று இந்த 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவில் மிகப் பெரியதாகவும், குறைந்த பேட்டரி சேமிப்புத் திறனை மட்டுமே கொண்டதாக இருந்தன.
2G சேவை :
பின்லாந்து நாட்டில் 1991-ம் ஆண்டு தான் முதன்முதலாக 2G சேவை தொடங்கப்பட்டது. முதன் முதலில் ஒயர் இல்லாமல் இன்டர்நெட் வசதியைப் பயன்படுத்திய சேவை இதுதான். இதில் போனில் தொடர்பு கொண்டு பேசவும் செய்யலாம்.
2G சேவையில் தான் குறுஞ்செய்திகளை அனுப்பும் SMS வசதி, படங்கள் மற்றும் காணொளியை அனுப்பும் MMS வசதி எனப் பல சிறப்பம்சங்கள் அறிமுகமாகின.
இன்று நாம் பயன்படுத்தும் அதிவேகமான இன்டர்நெட் சேவைகளுக்கு விதை போட்டது இந்த 2G தான். இதில்தான் முதன் முதலாக சிம் கார்டுகள் பயன்படுத்தப்பட்டன. இப்போதிருக்கும் இன்டர்நெட் வேகத்தோடு ஒப்பிடும்போது மிகக் குறைந்த இன்டர்நெட் வேகத்தை கொண்டு விளங்கியது 2G சேவை.
3G சேவை :
2G சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமானதையடுத்து, அதிக இன்டர்நெட் வேகத்தின் தேவை அதிகமானது. இதன் காரணமாக சிக்னல்களை சிறு கூறுகளாகப் பிரித்து அனுப்பும் 'பாக்கெட் ஸ்விட்சிங் முறை' அறிமுகப்படுத்தப்பட்டு, 3G சேவை உருவானது.
3G சேவையிலும் பல சிறப்பம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் இன்டர்நெட் வேகம் இன்னும் அதிகமாக இருந்தது. நம் இந்திய நாட்டுக்கு மிக தாமதமாக தான் 3G வந்து சேர்ந்தது என்றாலும், ஜப்பான் நாட்டில் 2001-ம் ஆண்டே இந்த சேவை அறிமுகமானது.
வீடியோ கான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ் வசதி ஆகியவை இதற்குப் பிறகுதான் சாத்தியமானது. ஒயர் இல்லாத வேகமான இன்டர்நெட் சேவையை உலகம் கண்டது 3G மூலமாக தான்.
4G சேவை :
3G சேவையைவிட அதிக இன்டர்நெட் வேகம் கொண்டதாக மேம்படுத்தப்பட்டு 4G சேவை உருவானது. முதன்முதலாக 2009-ம் ஆண்டு தென்கொரியாவில் இது அறிமுகமானது.
அதிவேக இன்டர்நெட் வசதி, துல்லியமான வீடியோ கால்கள், நொடிப்பொழுதில் மெயில் அனுப்புவது என தொலைத் தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை.
ஒரு நொடிக்கு 100 மெகா பைட் வேகம் வரை 4G சேவைகள் இன்று இயங்கி வருகின்றன. லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என இன்டர்நெட் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சேவைகளை அளித்தது 4G சேவை.
5G :
4G சேவை தான் வந்துவிட்டதே, இனி இன்டர்நெட் உலகில் சாதிக்க என்ன இருக்கின்றது? என்று எண்ணுபவர்களுக்கு பல ஆச்சரியங்களுடன் வரவிருக்கிறது 5G சேவை.
இச்சேவை அறிமுகமான பிறகு, இன்டர்நெட் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்கு மேல் வீடியோவால் தான் நடக்குமாம்.
மேலும், அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரி கார்டு, பென் டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப் போகும். மேலும், சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சில நொடிகளில் நடந்து முடியும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இதன்மூலம் தகவல் தொலைத் தொடர்பில் ஒரு புதிய சாதனையே நிகழ்த்தப்படும் என எதிர்பார்க்கலாம்.
-படித்தது
No comments
Post a Comment