ஊதிய உயர்வு விவகாரம்: அறிக்கை அளிக்க உத்தரவு
சென்னை : ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, 2009ம் ஆண்டுக்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை, அரசுக்கு அளித்தது.அதில், முரண்பாடுகள்
இருந்ததால், அவற்றை களைய, ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, 2010 ஆகஸ்ட்டில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அதில், 2009க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு, ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டது.இந்த உத்தரவுகளுக்கு முரணாக, நிதி, கல்வி, உள்துறை,
வருவாய்,மருத்துவ துறைகளில் 2009ம் ஆண்டுக்கு பின் சுருக்கெழுத்தர், தட்டச்சர் பணிகளில் சேர்ந்த 4,500 பேரில் பலருக்கு, ஊதிய உயர்வு வழங்கியது போல், தங்களுக்கும் வழங்க கோரி, வேளாண் துறையில் பணிபுரியும் 18 பேர் வழக்குதொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல்வி.அருண் ஆஜராகி, ''2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2010 ஆகஸ்ட்டில் பிறப்பிக்க உத்தரவில் கூறப்பட்டுள்ள பலன்களை வழங்க முடியாது.''சலுகை வழங்கி ஏதாவது அரசு துறைகள் உத்தரவு பிறப்பித்திருந்தால், அது குறித்து அறிக்கை பெற்று தெரிவிக்கிறேன்,'' என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில், உள்துறை, கல்வித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை மற்றும் நிதித் துறைச் செயலர்களை பிரதிவாதிகளாக சேர்த்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.கடந்த 2010ல் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்ட பணப் பலன்கள், 2009 ஜூன் 1க்கு பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்றும், அவ்வாறு அளிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட துறைகள் அளிக்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.விசாரணையை, 18ம் தேதிக்கு தள்ளி வைத்தார்
No comments
Post a Comment