Header Ads

Header ADS

அரசு பள்ளிகளில் இயந்திரத்தனமாகும் கற்பித்தல்! மதுரை ஆசிரியர் மனம் திறந்த கடிதம்- ஒவ்வொரு பாடவேளைக்கும் ஒரு 'லெசன் பிளான்' முன்கூட்டியே தயாரிக்க சொல்வது கற்பித்தலை பாதிக்கும் -

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலர் கார்த்திகேயன்

மதுரை : 'வகுப்பறை கற்பித்தல் என்பது ஆசிரியர், மாணவருக்கு இடையேயான ஒரு ஜீவனுள்ள நிகழ்வு; அதை புள்ளி விவரங்களுக்காக இயந்திரத்தனமாக்கி விட வேண்டாம்' என கல்வித்துறை கமிஷனர் நந்தகுமாருக்கு, மதுரை ஆசிரியர்கள் வெளிப்படையாக கடிதம் எழுதியுள்ளனர்.


தமிழக கல்வித்துறையில் கமிஷனர் முதல் இணை இயக்குனர்கள் வரை பல்வேறு குழுக்களாக பிரிந்து, 'டீம் விசிட்' என்ற பெயரில், ஒரே நேரத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்யும் செயல், ஆசிரியர்களை அச்சுறுத்தும் செயல் என கருத்து எழுந்துள்ளது.மதுரை உட்பட ஐந்து மாவட்டங்களில், டீம் விசிட் இன்று நடக்கவுள்ள நிலையில்,  மதுரை ஆசிரியர்கள் சார்பில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக செயலர் கார்த்திகேயன் என்பவர், கல்வித்துறை கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:


கல்லுாரிக் கல்வி இயக்ககத்தில், பேராசிரியராக இருந்து முதல்வராக பதவி உயர்வு பெற்று பின் அத்துறை இயக்குனர்களாக வருகின்றனர். அவர்கள் தான் கொள்கை முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் கல்வித் துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி நன்கு அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்கு அதுபோன்ற  வாய்ப்பு கிடைப்பதில்லை. கற்றல் கற்பித்தல் என்பது ஆசிரியர் - மாணவருக்கு இடையே ஜீவன் உள்ள நிகழ்வு. மாணவர்களுக்கு ஏற்ப கற்பித்தல் நுணுக்கங்களை ஆசிரியர்கள் கையாள்கின்றனர். ஆனால் 'டீம் விசிட்'டில் ஒவ்வொரு பாடத்திற்கும்/ பாடவேளைக்கும் ஒரு 'லெசன் பிளான்' முன்கூட்டியே தயாரிக்க சொல்வது எவ்வாறு பலன் தரும்?

 

இது, கல்வி உளவியலை புரிந்துகொள்ளாத செயலாக உள்ளது.'ரெமடியல் டீச்சிங்' என்பது அந்த பாடப்பொருளை அந்த பாட வேளையில் நடத்திய பின் குறையில்லாத கற்றலை வழங்க வேண்டும் என்பது தான். அதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. இதையும் பதிவேடாக தயாரிக்க, ஆசிரியர்களுக்கு நெருக்கடி கொடுப்பது நியாயமா? ஒவ்வொரு பாடவேளைகளுக்கும் பதிவேடுகளை தயாரித்துக்கொண்டிருந்தால் கற்பித்தலை எப்போது செய்வது? மாணவர் தினம் என்ன சாப்பிட்டான் என்பது முதல் 'எமிஸ்' செயலியில் எண்ணிலடங்கா தகவல்களை பதிவேற்றம் செய்துகொண்டிருப்பது தான் ஆசிரியர்களின் பணியா?

 

கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட உளவியல் மாற்றத்தை சமாளிக்க ஆசிரியர்கள் திண்டாடுகின்றனர்.மாணவர் கல்வித்தரம் உண்மையில் அதிகரிக்க ஆசிரியர்களை சுதந்திரமாக விடுங்கள். தேர்வு முடிவை நோக்கி ஆசிரியர்களை துரத்தாமல் வகுப்பறை கற்பித்தலை துாண்டும் வகையில் அவர்களின் கைகளை அவிழ்த்து விடுங்கள்.தேவையற்ற நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.