2009ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஊதியம் மறு ஆய்வுக்கான அரசாணை அமல்படுத்தப்படுமா?...அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவ கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசு மருத்துவராக சேர்ந்தவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை.
இதனால், அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் அரசின் நிலைபாட்டை 5 நாட்களில் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2009ம் ஆண்டு அரசாணையை அமல்படுத்தக்கோரி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி மனு கொடுத்தும் 6 மாதங்களாக தமிழக அரசு எங்கள் மனுவை கிடப்பில் போட்டுள்ளது. அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க கடந்த முறை உத்தரவிட்டும் அரசு மௌனம் காத்துவருகிறது. 2009 ம் ஆண்டு முதல் மூன்று முறை வழக்கு தொடரப்பட்டுள்ளது. அரசின் முடிவை எழுத்துப்பூர்வமாகவோ அல்லது உத்தரவாகவோ அரசு வெளியிட வேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டுமென்று கோரினார். இதையடுத்து, 2009ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை அமல்படுத்தப்படுமா, இல்லையா என்பதை ஏப்ரல் 29ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றையதினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment