கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன ??? Vikatan ARTICLE - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, December 29, 2020

கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன ??? Vikatan ARTICLE

கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா? - #LoanVenumaSir -


7 வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு.

 


கடைசி அத்தியாயத்தின் முடிவில், பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் எதில் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி குறைவாக இருக்கும் என்று கேட்டிருந்தோம். இந்தக் கேள்விக்கு சரியான பதிலை அதாவது, பொதுத்துறை வங்கிகள்தான் எனப் பலரும் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சரியான பதில் சொன்ன அனைவருக்கும் பாராட்டுகள்.

 

அது மட்டுமல்ல, கடந்த அத்தியாயத்தைப் படித்த மதுக்கூர் மணி என்பவர் ஒரு ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது...

கடன் வாங்கினேன், திரும்பக் கட்ட முடியவில்லை...

``நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது தனியார் வங்கியில் எனது பெயரில் சம்பளத்தின் அடிப்படையில் வேறு எந்த பிணையும் வைக்காமல் தனிநபர் கடன் வாங்கினேன். தற்போது கொரோனாவின் காரணமாகக் கடந்த ஒன்பது மாதமாக வேலையின்றி இருக்கிறேன். இந்த நிலையில, கடன் தவணையைக் கட்ட வேண்டும் என்று வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். நான் என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!’’ என்று கேட்டிருக்கிறார். அவருக்கான எனது பதில்...

 

6 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கடன் தவணை தள்ளிவைப்பு (Loan Moratorium) வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனா பிரச்னையின் காரணமாக அனைத்து 

வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலம் மாதத் தவணைகளை தள்ளி செலுத்தும் வசதியைக் கொடுக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்குக் கூடுதல் வட்டி வசூலிக்கப்பட்டாலும் சாதாரண வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மத்திய அரசு சலுகையாக வழங்குகிறது. இது கொரோனா காலத்துக்கு முன்பு தாங்கள் கடனை ஒழுங்காக செலுத்தி இருக்கும்பட்சத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கிகள் இந்த வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்குத் தருகின்றன. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே நான் அவருக்கு அளிக்கும் பதில்.

ரூ.2 லட்சம் கடனுக்கு எவ்வளவு வட்டி?

சரி, இந்த அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகளில், குறிப்பாக தனியார் வங்கிகளில் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் நீங்கள் கடன் வாங்கும்போது ஒரு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது வட்டி விகிதக் கணக்கு. உதாரணமாக, தனியார் வங்கி ஒன்றில் தனிநபர் கடன் ரூ.2 லட்சத்துக்கு விண்ணப்பிப்பதாக வைத்துக்கொள்வோம். அவர்கள் வட்டி விகிதம் 24% எனில் (தற்போதைய சூழ்நிலையில் தனிநபர் கடன் வட்டி விகிதம் 16 சதவிகிதத்திலிருந்து 24% வரை தரப்படுகிறது), நம்மில் பலர் மாதம் இரண்டு வட்டி என்ற முறையில் நம்மிடம் வட்டி பணம் வசூலிக்கிறது என்று நினைக்கிறார்கள்.

 

அதாவது, வருடத்துக்கு 24% வட்டி என்றால் மாதத்துக்கு 2% வட்டி என்று கணக்கிடுகிறார்கள். இது தவறு. ரூ.2 லட்சத்துக்கு 24% வட்டிக்கு மூன்று வருடங்களுக்கு மாதாந்தரத் தவணை ரூ.7,847 என்று வரும். அப்படி மூன்று வருடங்களுக்குச் செலுத்தினால், மொத்த வட்டி செலுத்திய தொகை ரூ.82,476 என்று வரும்.

 

இதுவே நாம் நடைமுறையில் பேசும் இரண்டு வட்டி என்று கணக்கிட்டால், நாம் செலுத்த வேண்டிய மொத்த வட்டி தொகை மூன்று வருடங்களுக்கு ரூ.1.44 லட்சம் (ரூ.4,000 மாத வட்டி x 36 மாதங்கள்) என்று வரும். இதிலிருந்து நாம் சாதாரணமாக வட்டி கணக்கிடுவதற்கும் வங்கிகள் வட்டி கணக்கிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.


கடன் வரலாற்றைப் பொறுத்தே வட்டி


இதில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு மாதமும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, அசலை எப்போது வேண்டுமானாலும் பகுதி 

பகுதியாகவோ, மொத்தமாகவோ செலுத்தும் வசதி இருக்கிறது. அவ்வாறு பகுதி பகுதியாகச் செலுத்தும்போது அதற்கு ஏற்றவாறு வட்டித் தொகை குறையும். இத்தகைய கடன் திட்டம் பெரும்பாலும் தங்க நகைக் கடன்களில் வழங்கப்படுகிறது.

ஒரே விதமான கடனுக்கு, வட்டி விகிதம் என்பது ஒவ்வொரு வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு இடையே மாறுபடலாம். மேலும், ஒவ்வொரு நபருக்கும் மாறுபடலாம். ஒருவரின் தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் வயது, கல்வித்தகுதி, தொழில், வருமானம், கூடுதல் வருமானம், சொத்து மதிப்பு, கடன் தகவல் அறிக்கையில் எந்த பாதகமான விஷயங்களும் இடம்பெறாதது ஆகியவற்றைக் கொண்டு வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது. மேற்சொன்ன அம்சங்கள் உங்களுக்கு சாதகமாக இருந்தால், வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

 

ஆப்ஸ் மூலம் கடனா, ஜாக்கிரதை!

மேற்சொன்ன அம்சங்கள் மட்டுமல்லாமல், இப்போது வந்திருக்கும் ஃபின்டெக் (Fintech) நிறுவனங்கள் தங்களின் சமூகத்தொடர்புக் கணக்குகள், கடன் அட்டை பயன்பாடுகள், வெளிநாட்டு பயணங்கள், கடன் தேவையின் அவசரம் ஆகியவற்றைக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய கடன் அளவையும் வட்டி விகிதத்தையும் தீர்மானிக்கின்றன. ஆகவே, நீங்கள் எந்த வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ கடன் வாங்குவதற்கு முன்னால், அந்த வட்டி விகிதம்தான் தங்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வட்டி விகிதம் என்று உறுதிப்படுத்திக் கொண்டு எடுப்பது நல்லது. ஆப்ஸ் மூலம் கடன் தரும் நிறுவனங்களிலிருந்து முடிந்தவரை கடன் பெறாமலே இருப்பது நல்லது.

 

இப்போது மாதாந்தரத் தவணை கணக்கீட்டு முறையையும் வட்டி விகிதங்கள் பற்றியான தகவல்களையும் பற்றி ஓரளவுக்கு தெளிவடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

No comments: