Header Ads

Header ADS

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய, சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய, சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் முருகேசன் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், குறைகளைக் களைவதற்குப் பதிலாக முரண்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதுவரை இல்லாத நடைமுறையாக பல்வேறு துறை பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது.

 

தமிழ்நாட்டில் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டன. புதிதாக நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் பல்வேறு முரண்பாடுகளும், குறைகளும் இருப்பதாக பல்வேறு அரசு ஊழியர் அமைப்புகள் முறையீடு செய்தன. அவற்றை ஏற்ற தமிழக அரசு, அதுகுறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நிதித்துறை செலவினங்கள் பிரிவுச் செயலாளர் எம்..சித்திக் தலைமையில் ஓர் உறுப்பினர் ஆணையத்தை அமைத்தது.

 

மற்றொருபுறம் 52 வகையான பணியாளர்கள் தங்களின் ஊதியப் பாகுபாட்டை நீக்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அதுபற்றிப் பரிந்துரைக்க ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்த ஊதிய விகித மாற்றங்கள்தான் அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு ரூ.2,600 சிறப்பு ஊதியம் அறிவிக்கப்பட்டிருப்பதால் அத்துறை பணியாளர்களுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதி களையப்பட்டிருக்கிறது. ஆனால், வேறு பல துறைகளைச் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய விகிதமும், பணி நிலையும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

 


இது நியாயமல்ல. குறிப்பாக ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணிநிலை போதிய புரிதல் இன்றி மத்திய அரசு பொறியாளர்களுடன் ஒப்பிடப்பட்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதுதான் இதற்குக் காரணமாகும்.

 

மத்திய அரசின் பொதுப்பணித் துறையில் பணியாற்றும் பொறியாளர்களும், தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களும் ஒரே பணிநிலையில் இருப்பவர்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்களின் மாத ஊதியம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை குறைக்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

 

இது இப்போது தொடங்கி வாழ்நாள் வரையிலும் பொறியாளர்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பை ஏற்படுத்தும். இந்தப் பாதிப்பைச் சரிசெய்ய வேண்டியது அரசின் கடமையாகும். தமிழக அரசுத்துறை பொறியாளர்களுக்கும், மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் பணிநிலையில் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மத்திய பொதுப்பணி பொறியாளர்கள் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள்; தமிழ்நாடு அரசுத் துறை பொறியாளர்கள் பொறியியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு முடித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இரு பிரிவினருக்கும் ஒரே ஊதியம் நிர்ணயிப்பது நியாயமல்ல. தமிழக அரசுத் துறை பொறியாளர்களுக்கு ரூ.15,600 அடிப்படை ஊதியம் மற்றும் பதவி 

நிலைக்கு ஏற்றவாறு தர ஊதியமும் நிர்ணயிக்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும்; பாகுபாடுகளைக் களையும்.

 

அதேபோல், நில அளவைத்துறை ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் பதவிகள் இதுவரை ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறையில் உள்ள ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர் பதவிகளுக்கு இணையாகக் கருதப்பட்டு சமமான ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது பதவி நிலையும், ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை உடனடியாகக் களைய தமிழக அரசு நடவடிகை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பணியாளர் சங்கங்களை அரசு அழைத்துப் பேச வேண்டும்”.

 

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.