புதிய கல்விக்கொள்கை - பரிந்துரைகளையும், கருத்துகளையும் அரசுக்கு வழங்க அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.
புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் பல எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. குறிப்பாக புதிய கல்விக் கொள்கை, மும்மொழி கல்வியை வலியுறுத்துவதால் அதற்கு தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
ஆனால் 39 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் செய்யப்படும் இந்த புதிய கல்விக் கொள்கை, கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்றும் 2030க்குள் அனைவருக்கும் கல்வி என்ற நிலையை இது ஏற்படுத்தும் எனவும் மும்மொழி கல்வியில் அந்தந்த பாடங்கள் தங்களுக்கு உகந்த மொழியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.
இருப்பினும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்த முதல்வர், புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய குழு அமைக்கப்படும் என்றும் அந்த குழுவின் ஆலோசனை படியே புதிய கல்விக் கொள்கை குறித்து அரசு பரிசீலிக்கும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி, தேசிய கல்விக்கொள்கையில் உயர்கல்வியில் தமிழக அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள், பரிந்துரைகளை வழங்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ளார். அந்த அரசாணையில், புதிய கல்விக் கொள்கையில் இருந்து தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்க உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் ஒரு உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment