புதிய கல்விக்கொள்கை குழு அமைப்பு பற்றி மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர்.திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் வழி பதிவும்,விமர்சனமும்
புதிய கல்விக்கொள்கை -2020 ஐ தமிழ்நாட்டில் அமல்படுத்திட அரசு முதன்மைச்செயலாளர்.திரு.தீரஜ்குமார் தலைமையில் 12உறுப்பினர்கள் கொண்ட குழுவினை தமிழக அரசு அறிவித்து உள்ளது.
இக் குழு அமைப்பு பற்றி மேனாள் பள்ளிக்கல்வி அமைச்சர்.திரு.தங்கம் தென்னரசு அவர்களின் முகநூல் வழி பதிவும்,விமர்சனமும்:
தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து அதை ‘ நடைமுறைப்படுத்த’ உரிய பரிந்துரைகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை ஒரு அரசாணையினைத் தற்போது வெளியிட்டுள்ளது.
தாய்ப்பூனை உள்ளே நுழைய ஒரு பெரிய வழியும், அதன் குட்டிப்பூனை நுழைய தனியே ஒரு சிறிய வழியுமாக அமைத்த கதையாக, ஒரே கல்விக் கொள்கையை ஆராய, தற்போது உயர் கல்வி, பள்ளிக்கல்வி எனத் தனித்தனியே இரண்டு ஆவர்த்தனங்கள்!
உயர்கல்விக்கான குழுவில் முற்றிலும் ‘ துணை வேந்தர்கள்’ மயம் என்றால்; பள்ளிக் கல்விக் குழு என்ற கலவை சாதத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களின் ஆதிக்கம். கறிவேப்பிலை போல ஓரிரு கல்வியாளர்கள். இரண்டுக்குமான ஒற்றுமை என்னவெனில், இந்த இரண்டு குழுக்களுக்கும் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்களே தலைவர்கள்.
உயர்கல்விக்கான குழுவைப் பொறுத்த மட்டில், அது தேசியக் கல்விக் கொள்கையை ஆராய்ந்து, தன் கருத்துகளை ஏற்கத்தக்கப் பரிந்துரைகளாக மாநில அரசுக்கு அளிக்கும் வகையில் மட்டுமே அதன் பணி வரையறை ( Terms of Reference) இருக்கக்கூடும் என்பதை அதற்கான அரசாணை வாயிலாக நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், பள்ளிக்கல்வித் துறையோ ஒரு படி மேலே போய் குழுவிற்கான பணி வரையறையை மிகத் தெளிவாகவே தனது ஆணையில் தெரிவித்து இருக்கிறது.
அதாவது, மொழிக்கொள்கையைத் தவிர்த்து ஏனைய விஷயங்களில் தேசியக் கல்விக் கொள்கையை எவ்வாறு ‘ நடைமுறைப்படுத்தலாம் ( Implementation)’ என்பதற்கான பரிந்துரைகளை, இந்தக் குழு வழங்கும் எனத் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதைத் சொல்லத்தான் இந்தக் குழுவே தவிர, அதன் பாதகங்களைத் நேர்மைத் திறத்தோடு தங்கள் எடுத்துச் சொல்வதற்கு அல்ல. பள்ளிக்கல்வி ஆணையர் மத்திய அரசின் துறைகளோடு நெருக்கத்தில் இருப்பதாகக் கருதப்படக்கூடியதாலோ என்னவோ, உயர்கல்விக் குழுவிற்கான ஆணையில் காணப்படாத இத்தகைய சில சொல்லாடல்களைப் பள்ளிக்கல்வித்துறையின் ஆணையில் நம்மால் பார்க்க முடிகின்றது.
இதில் இன்னொரு வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால், பள்ளிக் கல்வி அமைத்துள்ள இந்தக் குழு தன் இறுதி அறிக்கையினை அளிப்பதற்கான காலவரம்பு, அந்தக் குழு அமைக்கப்பட்ட நாளில் இருந்து ஒரு வருடம் என்பதாகும். அதாவது 2021 ம் ஆண்டு செப்டம்பர் வரை இவர்கள் ஆய்ந்து ஆராயப் போகிறார்களாம். இடைப்பட்ட ஒரு வருடமும் நடு நடுவே ‘ பிச்சுப்போட்ட விருதுநகர் பரோட்டா மாதிரி ’ அவ்வப்போது இடைக்கால அறிக்கைகளைத் தனித்தனியே தரப்போகிறார்களாம்.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை இனியும் விரிவாக விளக்க வேண்டிய தேவையில்லை.
‘நான் அடிப்பது போல அடிக்கிறேன்; நீங்கள் அழுவது போல அழுங்கள்’ என்பதாக இவர்கள் நடத்தத் துவங்கி இருக்கும் நாடகத்தில், ‘பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்’ என்ற பகல் வேஷத்தைப் போட்டுக்கொண்டால் மாத்திரம் அதிமுக அரசின் தந்திரக் கொண்டை மறைந்து விடாது.
ஒன்றை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளட்டும்.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பதே ஒரு ஆகாத பஞ்சாங்கம்!
அதற்கு அறுபது நாழிகையும் தியாஜ்யமாகத்தான் இருக்கும்.
No comments
Post a Comment