`4 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை; ப்ளஸ் ஒன்னில் 100 சதவிகிதத் தேர்ச்சி' - சாதித்த அரசுப் பள்ளி
துரை.வேம்பையன்-விகடன்
கரூர்: `4 பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை; ப்ளஸ் ஒன்னில் 100 சதவிகிதத் தேர்ச்சி' - சாதித்த அரசுப் பள்ளி
`மேல்நிலை வகுப்புகளில் தமிழ், கணினி அறிவியல், பொருளியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த ரொம்ப காலமாகவே ஆசிரியர்கள் இல்லை. புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை.'
கரூர் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தும், இதர ஆசிரியர்களின் கடின உழைப்பால், சமீபத்தில் வெளிவந்த 11-ம் வகுப்பு தேர்வு முடிவில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதம் காட்டி, அந்தப் பகுதி மக்களை நெகிழவைத்திருக்கிறார்கள்.
கரூர் மாவட்டம், கடவூரில் இயங்கி வருகிறது அரசு மேல்நிலைப் பள்ளி. கடவூர் பகுதி என்பது, கரூர் மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக உள்ளது. கடவூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள 34 கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைச் சுற்றி இயற்கையையே வட்டவடிவில் அரண்போல் மலைகளை அமைத்திருக்கிறது.
வெளியில் இருந்து இந்தப் பகுதிகளுக்குள் வந்துபோக மூன்றே மூன்று வழிகள்தாம் உள்ளன. இந்தப் பகுதி வானம்பார்த்த பூமி என்பதால், இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர், கூலிவேலை பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். தங்களது அடுத்த சந்ததியையாவது நல்ல முறையில் முன்னேற்றிக் காட்ட வேண்டும், அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தப் பகுதி மாணவர்கள் படிக்க, கடவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 34 கிராமங்களிலும் உள்ள மாணவர்கள் படிக்க இயங்கி வரும் ஒரே மேல்நிலைப் பள்ளி இதுதான். இந்தப் பள்ளியில் போதிய வசதிகளோ, தேவைப்படும் அளவில் ஆசிரியர்களோ இல்லை. ஆனாலும், தலைமை ஆசிரியை ஷீலாவும், இதர ஆசிரியர்களும் கடின உழைப்பை வெளிப்படுத்த, சமீபத்தில் வெளிவந்த 11-ம் வகுப்பு தேர்வு முடிவில் 100 சதவிகிதம் தேர்ச்சி கிடைத்திருக்கிறது. அதோடு, 12-ம் வகுப்பு தேர்ச்சியில், 90 சதவிகிதம் தேர்ச்சி கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து, அந்தப் பள்ளியில் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம்.
``இங்கு போதிய வசதிகள் இல்லை. மேல்நிலையில் மூன்று குரூப்புகள் உள்ளன. ஆனால், மேல்நிலை வகுப்புகளில் தமிழ், கணினி அறிவியல், பொருளியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த ரொம்ப காலமாகவே ஆசிரியர்கள் இல்லை. புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை. இருந்தாலும் தலைமை ஆசிரியை ஷீலா மேடம், எங்களை உற்சாகமாக வேலை வாங்கினார்.
நாங்களே அந்தப் பாடங்களுக்கும் மாணவர்களுக்கு கூடுதலாக பாடம் எடுத்தோம். ஸ்பெஷல் கிளாஸ்கள், டெஸ்ட்டுகள் என்று மாணவர்கள் கல்வி கற்கும் விஷயத்தில் அதிக அக்கறை காட்டினோம். இதன்விளைவாக, கடந்த 31-ம் தேதி வெளிவந்த தேர்வு முடிவில், எங்கள் பள்ளி ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கிறது. முதல் மதிப்பெண்ணை நிவேதா என்ற மாணவி (422/600) பெற்றிருக்கிறார்.
இங்கு தேர்தெழுதிய மாணவ, மாணவியர்கள் 86 பேரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதேபோல், கடவூர் அரசு மேல்நிலைப்பள்ளி ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவில் தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதத்தைப் பெற்றிருக்கிறது. முதல் மதிப்பெண்ணை ச.தேவிகா என்ற மாணவி (452/600) பெற்றுள்ளார். ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தும், நாங்க கடுமையா உழைச்சு, இத்தகைய வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மாணவர்களும் பொறுப்புணர்வுடன் ஒத்துழைத்து, இத்தகைய சாதனையை கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளி செய்ய வழிவகுத்திருக்கிறார்கள்.
தேவையான ஆசிரியர்கள் கிடைத்தால், எங்களது வெற்றி இன்னும் அதிகரிக்கும். இன்னும் பல சாதனைகளை செய்வோம். அதேபோல், பின்தங்கிய பகுதியில் உள்ள இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை நல்ல நிலைமைக்கு உயர்த்துவதற்காகத் தொடர்ந்து எங்களது கடின உழைப்பை வெளிப்படுத்துவோம்" என்றார்கள் உறுதியாக!
No comments
Post a Comment