ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து, படிப்படியாக வேலைவாய்ப்பை அரசு வழங்க வேண்டும் -ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தல்
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு சான்றிதழுக்கான காலத்தை நீட்டித்து, படிப்படியாக வேலைவாய்ப்பை அரசு வழங்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூலை 28)வெளியிட்ட அறிக்கை:
"இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 80 ஆயிரம் பேர், கடந்த ஆறரை ஆண்டுகளாக அரசுப் பணிக்காக காத்திருக்கிறார்கள்;.
தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று வேலை கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன. சாதாரணமாக தேர்வில் தேர்ச்சி என்பது எக்காலத்திற்கும் பொருந்தும். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் 2013-ம் ஆண்டு தேர்வு பெற்றவர்களுக்கான சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லுப்படியாகும். தற்பொழுது தேர்வு நடைபெற்று ஆறரை ஆண்டுகள் ஆகியும் பணி வழங்கப்படவில்லை. இன்னும் சில மாதங்களில் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகும் நிலையில் இருக்கின்றன.
மத்திய மற்றும் மாநில பேராசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு வழங்கப்படக்கூடிய தகுதிச் சான்றிதழ், ஆயுட்கால சான்றிதழாக இருக்கின்றது. அதேபோல், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு காலக்கட்டத்தை மீட்க முடியுமா அல்லது நீட்டிக்க முடியுமா என்று அரசு பரிசீலித்து ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளாக தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றும் வேலை கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர்களுக்கு தற்போதைய பாடத்திட்டம் தெரியாது என்று அரசு கருதுமேயானால் அவர்களுக்குப் பணி ஆணை வழங்கிய பிறகு, ஒரு குறுகிய கால மறு பயிற்சியை தற்கால பாடத்திட்டத்தின்படி பயிற்சி வகுப்புகள் நடத்தி அவர்களை பணி செய்ய அனுமதிக்கலாம். இவற்றை பள்ளிக் கல்வித்துறையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஆகவே,
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்குத் தகுதித் தேர்வு சான்றிதழுக்கான காலத்தை மறுபரிசீலனை செய்து நீட்டித்தும், படிப்படியாக வேலைவாய்ப்பை வழங்கியும், அவர்கள் வாழ்வில் ஒளிதீபம் ஏற்ற வேண்டும் என்று தமிழக முதல்வரையும் பள்ளி கல்வித்துறை அமைச்சரையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment