தனக்கு சொந்தமில்லாத பணத்தை போலீசிடம் ஒப்படைத்த பட்டதாரி ஆசிரியருக்கு குவியும் பாராட்டுகள்.
அரியலூர்; ஆண்டிமடம் அருகே ஏடிஎம் மெஷினில் வந்த தனக்கு சொந்தமில்லாத பணம் 9 ஆயிரத்தை போலீசிடம் ஒப்படைத்த பட்டதாரி ஆசிரியரை போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் வெகுவாக பாராட்டினர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இராமன் வயது (50). பட்டதாரி ஆசிரியரான இவர் திராவிடநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையம் ஒன்றில் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டை சொருகி ரகசிய குறியீடு எண்ணை டைப் செய்துள்ளார்.
அப்பொழுது முதலில் கசங்கிய நிலையில் ஒரு ரசீது வந்துள்ளது. பின்னர் 500 ரூபாய் நோட்டுகளாக 9 ஆயிரம் பணம் வந்துள்ளது. இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் செல்போனில் தனது கணக்கை சரிபார்த்துள்ளார். ஆனால் அவரது கணக்கில் பணம் எதுவும் குறையவில்லை. பின்னர் மீண்டும் கார்டை சொருகி முதலில் ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார்.
மீண்டும் கணக்கை சரிபார்த்துள்ளார். அப்பொழுது அவரது கணக்கிலிருந்து ஆயிரம் மட்டும் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து தனக்கு சொந்தமில்லாத பணத்திற்கு ஆசைப்படாத ஆசிரியர் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் முஹம்மது இத்ரீசிடம் 9 ஆயிரத்தையும் ஒப்படைத்துள்ளார். ஆசிரியரின் இத்தகைய செயலையும், அடுத்தவர் பணத்திற்கு ஆசைபடாத அவரின் நேர்மையையும், போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் அவரை வெகுவாக பாராட்டினர்.
No comments
Post a Comment