பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் புதிய வழிகாட்டல்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான புதிய வழிகாட்டல் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று காரணமாக மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எப்போது நடைபெறும் என்கிற பதற்றம் நெடுங்காலம் நீடித்தது. ஜூன் 15 ஆம் தேதி பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற நிலை இருந்தது. பெற்றோர், கல்வியாளர்கள், எதிர்க்கட்சிகள் தேர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கை விடுத்ததை அடுத்து ஜூன் 9 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இதே போன்று பிளஸ் 1 மாணவர்களுக்கும் மதிப்பெண் கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்களது பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் வருகைப் பதிவேடு விவரங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஜூனை 12 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கிடையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கத் தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்தது. இது போதாதென்று பிளஸ் 1 இல் எந்த பாடப் பிரிவு யாருக்கு என்ற ரீதியில் பேரமும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ள. இதனைத் தடுக்க பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றபடி பாடத் தொகுப்பைத் தேர்வு செய்யப் பள்ளிகள் அறிவுறுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.
இந்நிலையில் தேர்வு வாரியம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்றை இன்று அனுப்பியுள்ளது. அதில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை விளக்கி இருக்கிறது.
அதில் குறிப்பிடப்பட்டவை:
''பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களின் அசல் சேகரிக்கப்பட்டு அதில் வழங்கப்பட்ட உண்மையான மதிப்பெண் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை காலாண்டு அல்லது அரையாண்டுத் தேர்வை எழுதத் தவறிய மாணவர்கள் இருந்தால் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். பத்தாம் வகுப்பைப் பொறுத்தவரை மொழிப் பாடம், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 100 மொத்த மதிப்பெண்களுக்கு மாணவர் பெற்ற மதிப்பெண் கணக்கிடப்பட வேண்டும். அறிவியல் பாடத்துக்கு 75 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட வேண்டும்.
பிளஸ் 1 வகுப்பைப் பொறுத்தவரை வேதியியல் மற்றும் புவியியல் பாடங்கள் 70 மொத்த மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட வேண்டும். கணக்கியல் பாடமானது 90 மதிப்பெண்களுக்குக் கணக்கிடப்பட வேண்டும். பாட வாரியாக அனைத்துப் பாடங்களின் விடைத்தாள்களும் அடுக்கப்பட்டு புராகிரஸ் ரிப்போர்ட் இணைக்கப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலருக்கு பள்ளிகள் ஜூன் 22 ஆம் தேதியில் இருந்து 27 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதேபோன்று பிளஸ் 1 வகுப்புக்குரிய வேதியில், புவியியல் மற்றும் கணக்கியல் விடைத்தாள்கள் மற்றும் அவரவர் புராகிரஸ் ரிப்போர்ட் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஒரு வேளை இந்த ஆவணங்களில் சில இல்லாத பட்சத்தில் அது தொடர்பான உரிய விளக்கத்தைப் பள்ளி தலைமை ஆசிரியர் எழுத்து வடிவில் வழங்க வேண்டும்''.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய வழிகாட்டல் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு மாணவர்களின் மேல்நிலைக் கல்விக்கான கதவுகள் கூடிய விரைவில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-தமிழ் தி இந்து திசை
No comments
Post a Comment