அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்க; யுஜிசி.,க்கு ராகுல் கோரிக்கை
புதுடில்லி: கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என யுஜிசி அறிவித்த நிலையில், அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என காங்., எம்பி ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்னையால் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூன்று மாதங்களாக விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் படித்த மாணவர்களுக்கு ஆண்டின் இரண்டாவது செமஸ்டர் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த தேர்வுகளை நடத்துவதா ரத்து செய்து விட்டு முந்தைய பருவ தேர்வு அடிப்படையில் மதிப்பெண் வழங்குவதா என மாநில அரசுகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டியது கட்டாயம் என பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. அறிவித்தது. இது குறித்து காங்., எம்பி., ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமல்ல. மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கைகளை யுஜிசி கட்டாயம் கேட்க வேண்டும். அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்; முந்தைய மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
No comments
Post a Comment