+2 Result - புரோட்டகால் மீறல் குறித்து விசாரணை!
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, அமைச்சருக்கே தெரியாமல் வெளியிட்டது குறித்து, பள்ளி கல்வித் துறையில் விசாரணை துவங்கியுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 24ல் முடிந்தது. ஜூன் இரண்டாம் வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரானது. ஜூலை, 6ல், தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முடிவு செய்திருந்தார். இதற்காக, முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் கேட்டு, கோப்பும் அனுப்பப்பட்டது. ஆனால், மார்ச், 24ல் விடுபட்ட தேர்வை, மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்த, 780 மாணவர்களுக்கு தேர்வை நடத்திய பின், தேர்வு முடிவை வெளியிடலாம் என, தள்ளி வைக்கப்பட்டது. இந்த மறுதேர்வு, வரும், 27ல் நடக்க உள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ரிசல்ட், ஜூலை, 13ல் வெளியானது. அதை தொடர்ந்து, இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்ப அறிவிப்பை, தமிழக உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.மேலும், தனியார் கல்லுாரிகளும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளை துவங்கின. அதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் போட்டி போட்டு, விண்ணப்பங்களை பெற்றனர். இத்தனைக்கு பிறகும், பள்ளி கல்வித் துறையின் தேர்வு துறை இயக்குனரகம் அமைதி காத்தது. இதேநிலை நீடித்தால், தமிழக பாடத்திட்ட, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் முன், மற்ற பாடத் திட்ட மாணவர்கள், தமிழக கல்லுாரிகளில் சேர்ந்து விடும் அபாயம் ஏற்பட்டது.
குற்றச்சாட்டுஇதையடுத்து, தேர்வு முடிவை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு, தேர்வுத் துறை இயக்குனருக்கு, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தேர்வுத்துறை இயக்குனர் பழனிசாமி மற்றும் சில அதிகாரிகள், இரவோடு இரவாக ஆயத்தமாகி, காலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி, தேர்வு முடிவை வெளியிட்டுள்ளனர்.தேர்வு முடிவுகள் வெளியான விபரம், ஈரோட்டில் இருந்த பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கே தெரியவில்லை. அதேபோல, பள்ளி கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் உள்ளிட்ட இயக்குனர்களுக்கோ, இணை இயக்குனர்களுக்கோ தெரியாது. அனைவரும், 'டிவி'யை பார்த்தே விபரம் அறிந்தனர். வழக்கமாக, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் நேரம், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.
மாணவர்களும் அதற்கேற்ப தயாராவர்.பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், உயர்கல்வி துறை செயலகம், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கல்லுாரி கல்வி இயக்குனரகம் உள்ளிட்டவற்றுக்கும், முன் கூட்டியே தகவல் அளிக்கப்படும்.இந்த முறை, உரிய, 'புரோட்டகால்' என்ற வழக்க முறைகளை பின்பற்றாமல், தேர்வுத்துறை இயக்குனர் ரகசியம் காத்து, பிளஸ் ௨ தேர்வு முடிவுகளை வெளியிட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி கல்வித் துறை செயலகத்தின் உத்தரவை பின்பற்றுவதில், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு திட்டமிடலும், ஒருங்கிணைப்பு பணிகளும் இல்லாததே காரணம் என, தெரியவந்துள்ளது.
தாமதம் : தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியான போதும், கிராமங்களிலும், மலைப்பகுதிகளிலும் வசிக்கும் மாணவர்களுக்கு, தேர்வு முடிவுகள் வெளியானது மாலையில் தான் தெரியவந்தது. அவர்களுக்கு, பெரும்பாலும் இணையதள வசதி இல்லாததால், முன் கூட்டியே தகவல் தெரிந்து, பள்ளிகளுக்கு நேரில் சென்று மதிப்பெண்ணை தெரிந்து கொள்வர். இந்த முறை அதற்கு வாய்ப்பில்லாமல் போனது.முதல்வர் அலுவலகம் முதல், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரையிலும், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது தாமதமாகவே தெரிந்துள்ளது. எனவே, 'புரோட்டகால்' மீறல் குறித்து, துறை ரீதியான விசாரணை துவங்கியுள்ளது.
No comments
Post a Comment