நாகை: 100 நாள் வேலைத்திட்டம்; மண் அள்ளும் ஆசிரியர்கள்! - ஊரடங்கு அதிர்ச்சி
vikatan news
லாக்டௌன் தொடங்கியதிலிருந்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் சேதாரமின்றி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்?
அரசு
மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சுயநிதி ஊதியம் பெற்று வந்த ஆசிரியர்களும் தனியார் கல்லூரிகளில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்களும் கொரோனா ஊரடங்கால் வாழ்க்கையை நகர்த்துவதற்கு வழியின்றி, 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து மண் அள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள், தனியார் கல்லூரிகளில் சொற்ப ஊதியத்துக்கு வேலை பார்த்து வருகின்றனர். அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்களின் சம்பளத்தோடு ஒப்பிடும் போது, சுய நிதிக் கல்லூரி ஆசிரியர்களின் மாத ஊதியம் மிகக் குறைவு.
கடந்த மார்ச் மாதம் கல்லூரியில் இறுதியாண்டு நெருங்கிக் கொண்டிருக்கும்போது, கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. தற்போது மூன்று மாதங்களைக் கடந்து லாக்டௌன் நீடிக்கிறது.
அவரவர்களின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், மாதங்கள் நான்கு கடந்த பிறகும் இன்னும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால் சுயநிதி கல்லூரிகளில் ஊதியம் பெறும் ஆசிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லூரி ஆசிரியர்கள்
கல்லூரி ஆசிரியர்கள்
இதுபற்றி ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். "ஒரு சில கல்லூரிகளில் முதல் மாதம் முழு ஊதியம் தந்தார்கள். பிறகு பாதியாகக் கொடுத்தனர். பின்பு கல்லூரிகள் திறந்த பின்பு தருவதாகவும் வீட்டில் தானே இருக்கிறீர்கள்... அப்படியிருக்கும்போது எவ்வாறு சம்பளம் தர முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்
லாக்டௌன் தொடங்கியதிலிருந்து அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வொரு மாதமும் சேதாரமின்றி சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால், 4 மாதங்கள் தாண்டிய பிறகும் சம்பளம் இல்லாமல் திண்டாடுகிறோம். எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று தவிக்கிறோம். அரசு மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் இதுவரை சுயநிதி கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை.
வாழ்க்கையை நகர்த்துவதற்கு வேறு வழியின்றி, எவ்விதப் படிப்புச் சான்றிதழும் தேவையில்லாத வேலையாள்கள் செய்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து ரோட்டில் மண் அள்ளும் வேலையைச் செய்து வருகிறோம். சிலர் இட்லிக் கடைகளை நடத்துகின்றனர்.
ஒரு
பிரபலமான பள்ளியில் நல்ல செல்வாக்குடன் பணியாற்றி வந்த முதல்வர் ஒருவர், தனது சொந்த ஊரில் மனைவியுடன் சேர்ந்து தள்ளுவண்டியில் ஊர் ஊராகச் சென்று இட்லி, தோசை, வடை விற்று குடும்பத்தை நடத்தி வருகிறார். இன்னும் சிலர் தங்களின் வீடுகளில் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்" என வேதனைப்பட்டனர்.
``எந்த வேலை வேண்டுமானாலும் செய்யலாம் சார். ஆனால், கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்த நான், இப்ப ரோடு வேலை செய்வதை, நான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவர்களும் அவங்க பெற்றோரும் பார்க்கும்போது, அவர்களைப் பார்த்து நான் தலைகுனிஞ்சு நிற்க வேண்டியிருக்கு அல்லது முகத்தைத் திருப்பி வைச்சிட்டு நிக்க வேண்டி வருது. அதை நினைத்து பாக்கும்போதுதான் நெஞ்சு வெடிச்சிரும் போலிருக்கு” என்றவர்,
கொரோனா அச்சம்… 10,000 தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம்? - தேனி கலெக்டர் ஆலோசனை
``உலக வரலாற்றில், மாணவர்களுக்கு அறிவுப் புகட்டும் ஆசிரியர்களுக்கு இப்படியொரு நிலைமை வந்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். எனவே மத்திய, மாநில அரசுகள், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் சுய நிதி ஊதியம் பெறும் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பரிதாப நிலையைக் கருத்தில் கொண்டு, நிவாரண நிதி வழங்க வேண்டும்" என்றார் கலங்கியவாறு.
No comments
Post a Comment