இந்த ஆண்டு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பு சேர்க்கை நடத்த கோரிக்கை!
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்தாண்டு மட்டும், 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற்று, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கையை நடத்த
வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு
முழுதும் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., - சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற, மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த
ஆண்டு, 'நீட்' நுழைவு தேர்வு, மே, ௩ல் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா பரவல் தடுக்க, நாடு முழுதும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், ஜூலை, ௨௬க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
எப்போது கட்டுக்குள் வரும் என, தெரியவில்லை. எனவே, இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புக்கு, மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.இதுதொடர்பாக, மத்திய அரசிடம், தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:நீட் தேர்விலிருந்து, விலக்கு கோருவது பற்றி, தன்னிச்சையாக கூற முடியாது; அரசு தான் முடிவுவெடுக்க வேண்டும். நீட் தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் அவகாசம் உள்ளது.
தமிழகத்தை போல, டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும், கொரோனா தாக்கம் உள்ளது. எனவே, நீட் தேர்வை ஒத்திவைப்பது குறித்து, மத்திய அரசு தான் முடிவெடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments
Post a Comment