ஆசிரியர்களைக் கொரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கரோனா தடுப்புப் பணிக்கு அனைத்துத் துறை பணியாளர்களையும் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, கரோனா பாதித்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரிப்பது, கவுன்சிலிங் வழங்குவது போன்ற பணிகளில் சென்னை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்களைப்
பணியமர்த்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இந்தப் பணிகளுக்கு 50 வயதுக்குக் குறைவான ஆசிரியர்களிடம், அவர்களின் விருப்பத்தைப் பெற்று பணியமர்த்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், ஆசிரியர்களின் விருப்பத்தைப் பெறாமல் அவர்களைக் கரோனா பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த
மனுவில், ''சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் 1,200 ஆசிரியர்கள் ஷிப்ட் முறையில் கரோனா கட்டுப்பாட்டு மையப் பணிகளுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் விருப்பத்தைக் கேட்காமலும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் இப்பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு மையப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி ஏதும் வழங்கப்படவில்லை.
கட்டுப்பாட்டு மையங்களில் தனிமனித விலகல் பின்பற்றப்படாததால் ஆசிரியர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால், வீடுகளில் இருந்து கவுன்சலிங் வழங்கத் தயாராக உள்ளனர்.
தனிமனித விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், ஆசிரியர்களைக் கரோனா சம்பந்தப்பட்ட பணிகளில் அமர்த்தத் தடை விதிக்க வேண்டும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த
மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments
Post a Comment