Header Ads

Header ADS

தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த காலத்தையும் சேர்த்து தலையாரிகளின் ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவு


உயர் நீதிமன்ற மதுரை கிளை News in Tamil ...

 
தமிழகத்தில் தலையாரிகள் மற்றும் வெட்டியான்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணி நிரந்தரம் செய்யப்படும் வரையிலான பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தலையாரி, வெட்டியான் போன்ற கிராம அடிப்படை ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் வெகு காலமாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கடந்த 1.6.1995-ல் கிராம உதவியாளர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

இவர்கள் ஓய்வு பெற்ற போது பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாளிலிருந்து ஓய்வு பெற்ற நாள் வரையிலான பணிக்காலத்தை கணக்கிட்டே ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
   
இதையடுத்து பணியில் சேர்ந்த நாளிலிருந்து மொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தலையாரிகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதிகள் தலையாரிகள் பணி நிரந்தரம் செய்யப்படுவதற்கு முந்தைய பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதிய கணக்கில் எடுத்துக்கொள்ள உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடியானது.

இந்நிலையில் இதே கோரிக்கைக்காக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து அழகு, தங்கராஜ், பாகிருஷ்ணன், நீலமேகம், வேலு, நடராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தலையாரிகள் தங்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்தும், தங்கள் முழுப்பணிக்காலத்தையும் ஓய்வூதியத்திற்கு கணக்கிட உத்தரவிடக்கோரியும் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சு.விஸ்வலிங்கம், தலையாரிகளுக்கு பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி உயர் நீதிமன்றம் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் அரசு அந்த உத்தரவுகளை செயல்படுத்த மறுக்கிறது என்றார்.
  
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 31.5.1995 வரையிலான பணிக்காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தையும், பணி நிரந்தரம் செய்யப்பட்டதில் இருந்து ஓய்வு வரையிலான பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.


இதன் அடிப்படையில் மனுதாரர்களின் திருத்தப்பட்ட ஓய்வூதிய பரிந்துரைகளை 8 வாரத்தில் வருவாய்த்துறை முதன்மை செயலர் தலைமை கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். அந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய பரிந்துரை அடிப்படையில் தலைமை கணக்காயர் 4 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.