10ம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடு புகார்: காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை 3 நாட்களில் தொகுக்க தேர்வுகள் இயக்கம் அதிரடி உத்தரவு.
முறைகேடுகளை தடுக்க 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை மூன்றே நாட்களில் தொகுக்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15 முதல் 25 வரை நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேபோல் 11ம் வகுப்புக்கும் சில தேர்வுகள் விடுபட்டிருந்தன. இந்த தேர்வையும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
தேர்வினை நடத்த அனைத்து பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. தொடர்ந்து, கொரோனா நோய் தொற்றினை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு மற்றும் விடுபட்ட 11ம்
வகுப்பு தேர்வுகள் அனைத்தும் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு மதிப்பெண் தயாரிப்பில் முறைகேடுகளை தடுக்க மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை மூன்றே நாட்களில் தொகுக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
இது
தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் இன்று பிற்பகல் முதல் வருகின்ற 19ம் தேதி வரை மூன்றே நாட்களில் விடைத்தாள் தொகுப்பு பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களுடன் புரோக்ரஸ் கார்டையும் இணைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற 22ம் தேதி முதல் 27ம் தேதிக்குள் இவற்றை மாவட்ட கல்வி அலுவலர் அறிவிக்கும் பள்ளியில் தவறாமல் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எவ்வித புகாருக்கும் இடம் கொடுக்காமல் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களை தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது..
No comments
Post a Comment