Header Ads

Header ADS

10 ம் வகுப்புப் பொதுத்தேர்வை தள்ளி வையுங்கள். மாணவர்களின் உயிரைவிட வேறு எதுவும் முக்கியமில்லை.. தமிழக முதல்வருக்கு கல்வியாளர்கள் சங்கமம் கோரிக்கை


 Independence Day: Here is the list of 16 TN police officers who ...

கொரோனா என்னும் தொற்றுநோயோடு உலகமே போராடிக்கொண்டிருக்கும் சூழலில், அனைத்து வகையிலும் திறம்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முற்பட்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அதன் காரணம் அரசின் நிதிச்சுமை மற்றும் மத்திய அரசு போதிய நிதியினை ஒதுக்கவில்லை எனக் கூறப்பட்டதை தயக்கத்தோடு மக்கள் ஏற்றுக்கொண்டாலும்கூட, தற்போது அவசரமாக 10 ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு என அறிவித்திருப்பது பேரதிர்ச்சியை  பெற்றோர்களிடத்திலும், மாணவர்களிடத்திலும்,
பொதுமக்களிடத்திலும் மிக முக்கியமாக கல்வியாளர்களிடத்திலும் ஏற்படுத்தி இருக்கின்றது. இங்கு தேர்வைப் பற்றிய பயம் எவருக்குமில்லை. ஆனால் உயிரைப் பற்றிய பயம் அனைவருக்கும் உண்டு.


கீழ்கண்ட விசயங்களைக் கருத்தில்கொண்டு முடிவெடுக்க பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் ஐயா!

குழந்தைகள் தேர்வுக்குத் தயார்தான்
ஆனால்
வரவேற்பது கொரோனாவாக இருந்தால்
என்ன செய்வது?
 
தேர்வை வைத்தே ஆக வேண்டுமென்றால்,
கொஞ்சம் தள்ளி வைக்கலாமே?

கொரோனா தமிழ்நாட்டில் இல்லையெனும் சூழல் வரும்வரை
கல்லூரிகள் திறக்கபட மாட்டாது என குறைந்தபட்சம் செப்டம்பர் வரை கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படும்பொழுது,
பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் ஏன் இந்த அவசரம்..

குழந்தைகளது கல்வியை விட,
அவர்களது உயிரும், மனநிலையும் முக்கியம்

வெளியூரில் இருந்து வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வாறு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வீர்கள்?

பேரூந்துகளில் வந்தால் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்வீர்களா? மாட்டீர்களா?

வெளியூரில் விடுதியில் தங்கிப் பயின்று வந்த  மாணவர்கள் ஓரிடத்தில் தங்கி, எப்படி இந்த சூழலில் தேர்வை எழுத முடியும்?

விடுதியில் தங்கினால் அங்கு சமூக இடைவெளியை எவ்வாறு கண்கானிப்பீர்கள்? சமையலர்களுக்கு பரிசோதனை செய்வது யார்?


கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களது குடும்பச்சூழல், பொருளாதார நிலை, அவர்களது மனநிலை இவற்றைப் பற்றி நாம் கவனத்தில் கொள்ள வேண்டுமா? இல்லையா?

ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் சரி.
ஆனால் பல நூறு, பல ஆயிரம் எனப் பயில்கின்ற பல்வேறு பள்ளிகளில் சமூக இடைவெளியில் கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழலில் அதற்கான நேரமும், சுகாதாரம் பேண வேண்டிய சூழலும் தற்போதைய சூழலில் சாத்தியமாகுமா?

தினந்தோறும் தேர்வு அறைக்கு வரும் அறைக் கண்காணிப்பாளருக்கு தினசரி மருத்துவப்பரிசோதனைகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதா? அதற்கான முன்னேற்பாடுகள் என்ன?


தேர்வு நடைபெறும் சூழலில், ஆசிரியர்களில் அல்லது  மாணவர்களில் எவருக்கேனும் தொற்று ஏற்பட்டால் அங்கு தொடர்ந்து தேர்வு நடைபெறுமா? அம்மையத்தில் உள்ள பிற மாணாக்கர்களின் பாதுகாப்பு என்னவாகும்?

மிகமுக்கியமாக இந்த தேர்வை பள்ளியைத் திறந்து , முழுப்பாதுகாப்பையும் உறுதி செய்துவிட்டு, தங்கள் ஆசிரியர்களோடு மாணவர்களை குறைந்த பட்சம் 15 நாட்களாவது தங்களது வகுப்புகளில் கலந்துரையாடச் செய்துவிட்டு, பின்பு தேர்வை நடத்தினால் என்ன?

இப்படி பதில் சொல்லவேண்டிய அவசியமான  கேள்விகளுக்குப் பதிலும், சரியான திட்டமிடலும் இருந்தால் மட்டுமே தேர்வு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

கல்வி என்பது மாணவர்களின் உளவியல் சார்ந்ததது என்பது உண்மையானால் மேற்கண்ட அத்தனையும் சரிசெய்துவிட்டே, தேர்வுகளை நடத்த வேண்டும் எனப் பணிவுடன் தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் கல்வியாளர்கள் சங்கமம் சார்பில் பணிவுடன் கோரிக்கை விடுக்கின்றேன்.

சி.சதிஷ்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.