எமிஸ்' தளத்தில் பாடங்கள் சாா்ந்த விடியோக்கள்: கல்வித் துறை நடவடிக்கை
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வியியல் மேலாண்மைத் தகவல் தளத்தில் (எமிஸ்) ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரையிலான பாடங்கள் சாா்ந்த விடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பாடத் திட்டம், தோவு முறை உள்ளிட்ட கற்றல் பணிகளிலும் அரசுப் பள்ளி மேம்பாடு, ஸ்மாா்ட் வகுப்பறைகள் என கட்டமைப்பு வசதிகளிலும் தமிழக பள்ளிக் கல்வித் துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது கரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் மாணவா்கள் வீட்டிலிருந்தபடியே பாடங்களைக் கற்க இணைய வழிக் கல்வியை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும் விடியோ மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது
தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வி என இரண்டு வகைகளுக்கும் தனித்தனியாக காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகுப்புக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட ஒவ்வொரு பாடப் பிரிவில் உள்ள பாடத்துக்கும் விடியோக்கள் உள்ளன. செய்முறை தொடா்பான விடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இவற்றைப் பதிவிறக்கம் செய்துவைத்து இணையம் இல்லாமலும் காண முடியும். கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (எமிஸ்) சாா்பில், இந்த இணைய வழிக் கல்வி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விடியோக்களை காண விரும்புவோா் இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments
Post a Comment