தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை.. முதல்வர் அதிரடி
சென்னை: தமிழகத்தில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று முன் தினம்
தமிழகத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை பள்ளிக் கல்வித் துறை விடுமுறை அறிவித்தது.
இதையடுத்து நேற்றைய தினம் அந்த விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறையை உறுதி செய்தார். இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழகத்தில் அனைத்து மழலையர், தொடக்க பள்ளிகளுக்கும் மார்ச் 31 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். மாநில எல்லைகளில் அமைந்துள்ள திரையரங்குகளை மூடவும் உத்தரவிடப்படுகிறது. மாநில எல்லைகளில் உள்ள வணிக வளாகங்களையும் மூட உத்தரவிடப்படுகிறது. பொது இடங்களில் கூடுவதை அடுத்த 15 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு நோய்வாய்பட்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள் செல்ல வேண்டாம். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பினால் கைகளை அவ்வப்போது சோப்பு போட்டு கழுவ வேண்டும் என அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
No comments
Post a Comment